தனியார் மாந்தோப்பை சூறையாடிய காட்டு யானை - விவசாயி வேதனை! - லேட்டஸ்ட் திருப்பத்தூர் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் : ஆம்பூர் அருகே தனியார் மாந்தோப்பிற்குள் நுழைந்த காட்டு யானை மரங்களை சேதப்படுத்தி விட்டு தப்பி ஓடியது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கொத்தூர் பகுதியில் உள்ள ஆம்பூர் - பேர்ணாம்பட் வனச்சரக எல்லையில் கோமதி என்பவருக்குச் சொந்தமான மாந்தோப்பு உள்ளது.
சீசன் நேரம் என்பதால் மா மரத்தில் காய்கள் காய்த்து தொங்கி உள்ளன. வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை கோமதியின் மாந்தோப்பு வேலியை உடைத்து தோப்புக்குள் நுழைந்தது. மேலும் அங்கிருந்த மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை, கிளைகளை உடைத்து பழங்களை தின்றுவிட்டு தப்பி ஓடியது. வழக்கம்போல் தோப்பிற்கு வந்த கோமதிக்கு யானையின் அட்டகாசம் மிகுந்த வேதனையை அளித்து உள்ளது.
யானையின் அட்டகாசம் குறித்து கோமதி தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த வனத் துறையினர் அடுத்த முறை யானை அட்டகாசத்தில் ஈடுபடாத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கோடை காலம் தொடங்கியதால் வனப் பகுதியில் போதிய அளவிலான குடிநீர் மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக காட்டு யானை உள்ளிட்ட விலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுப்பதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.