மாந்தோப்பில் புகுந்த 8 அடி மலைப்பாம்பு.. மிரண்டு ஓடிய தொழிலாளிகள்!
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு திடீரென மாந்தோப்பில் புகுந்தது. இதனால் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த கூலித் தொழிலாளர்கள் பதறி அடித்து ஓட்டம் எடுத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பையனபள்ளி கூட்ரோடு அருகே அக்பர் என்பவருக்குச் சொந்தமான மாங்காய் தோப்பு உள்ளது.
இந்த தோப்பில் கூலி தொழிலாளர்கள் மாங்காய் அறுவடை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மாந்தோப்பில் சுமார் எட்டு அடி நீளம் கொண்ட மலைப் பாம்பு ஒன்று புகுந்தது. இதனைக் கண்டு கூலி தொழிலாளர்கள் தோப்பிலிருந்து பதறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து அந்த கூலி தொழிலாளிகள் உடனடியாக நாட்றம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு அதிகாரி ரமேஷ் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பொது மக்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாமல் மலைப்பாம்பை லாபகரமாகப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அம்மலைப்பாம்பை வனத்துறையினர் நாட்றம்பள்ளி அருகே உள்ள காப்புக் காட்டில் விட்டு சென்றனர். இச்சம்பவத்தினால் அப்பகுதி மக்களிடையே சிறிது நேரத்திற்குப் பரபரப்பு சூழல் காணப்பட்டது.
இதையும் படிங்க: கன்னியாகுமரி விரைவு ரயிலை கவிழ்க்க சதி?... திருச்சி அருகே நடந்தது என்ன?