ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: தென்காசி போதை டாக்டரின் மருத்துவமனைக்கு சீல்! - பல் மருத்துவர் ராமதங்கராஜன்
🎬 Watch Now: Feature Video
Published : Oct 6, 2023, 7:39 PM IST
தென்காசி: கடையம் பகுதியில் ராமதங்கராஜன் என்பவரின் தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இவர் அடிக்கடி மது அருந்தி விட்டு போதையில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் பல் பிடுங்குவதற்காக மருத்துவர் ராமதங்கராஜனிடம் ஒருவர் சென்றுள்ளார்.
அப்போது மருத்துவர் மது போதையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நோயாளி, மது அருந்தி விட்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கலாமா என்று கேட்டுள்ளார். இந்நிலையில் மது அருந்தியதை ஒப்பு கொண்ட மருத்துவர், அது ஒன்றும் பிரச்சனை இல்லை 5 நிமிடத்தில் சிகிச்சையை முடித்து விடலாம் என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தை அந்த நோயாளி வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போதையில் சிகிச்சை பார்த்த பல் மருத்துவர் குறித்து ஈடிவி பாரத்தில் செய்து வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோட்டாட்சியர் லாவண்யா, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் பிரேமலதா தலைமையில் சுகாதாரத் துறையினர் மருத்துவர் ராமதங்கராஜனின் பல் மருத்துவமனைக்குச் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.