சென்னை: சென்னை, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக, தண்ணீர் கேன் போடும் சதீஷ் என்ற இளைஞர் மீது புகாரளிக்க, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்றனர்.
அப்போது காவல்துறை பெண் ஆய்வாளர் ராஜி தங்களை தாக்கியதாகவும், புகாரில் இடம்பெற்றுள்ள மற்றொரு சிறுவனின் பெயரை நீக்க வற்புறுத்தியதாகவும் சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்டிருந்தனர். இந்நிலையில், அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான போக்சோ வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, தமிழகத்தி்ல் உள்ள வெளிமாநில 7 ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
பெண் இன்ஸ்பெக்டர் கைது
அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையிலான இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவில் ஆவடி சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஜமன் ஜமால், சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் இடம் பெற்றனர். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் 14 வயது சிறுவன் மற்றும் சதீஷ் என்ற இளைஞர் என இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நடுவான்கரை பகுதியை சேர்ந்த அதிமுக 103-வது வட்ட செயலாளர் சுதாகர் என்பவரும், இந்த வழக்கை முதலில் விசாரித்த அண்ணா நகர் மகளிர் காவல் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் ராஜி என்பவரும் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் கைதாகினர்.
அதிமுக பிரமுகர் உடந்தை
காவல் ஆய்வாளர் ராஜி புகார்தாரரை தாக்கியதாகவும், புகார் மீதான சரிவர விசாரணை நடத்தவில்லை என்பதாலும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதிமுக பிரமுகர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சதீஷுக்கு அடைக்கலம் கொடுத்ததால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் சிறையில் அடைப்பு
மேலும், கைது செய்யப்பட்ட இருவருக்கும் பலத்த பாதுகாப்புடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்துவிட்டு, அவர்களை எழும்பூர் நீதிமன்ற நீதிபதிகள் குடியிருப்பில் நீதிபதி ராஜலட்சுமி முன்னிலையில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி ராஜலட்சுமி கைது செய்யப்பட்ட அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜி ஆகிய இருவருக்கும் வருகின்ற 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதனை தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஏற்கனவே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக இன்ஸ்பெக்டர் ராஜி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு பணியில் இருந்ததாகவும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் பெயரை நீக்க அதிமுக நிர்வாகி சதீஷ் மூலமாக பணம் வாங்கியதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் தான் இன்ஸ்பெக்டர் ராஜியை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோல் அதிமுகவிலிருந்து சுதாகரும் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது.