சமத்துவத்திற்கு சான்று.. ஆலங்குடி நாமபுரீஸ்வரருக்கு கிறிஸ்துவ, இஸ்லாமிய மக்கள் சீர்வரிசை! - மதநல்லிணக்கம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18093525-thumbnail-16x9-top.jpg)
புதுக்கோட்டை: இரண்டாவது குரு ஸ்தலமாகத் திகழும் ஆலங்குடியில் உள்ள தர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீ நாமபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று (மார்ச்.26) நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அப்பகுதியில் உள்ள தேவாலயம், பள்ளிவாசல்களிலிருந்து கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியச் சமுதாய மக்கள் ஒன்றிணைந்து சீர் வரிசைகளை ஊர்வலமாக எடுத்து வந்து வழங்கினர்.
இதன் தொடர்ச்சியாக, கோயிலுக்கு வந்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்குக் கோயில் நிர்வாகத்தினர் திலகமிட்டு ஆரத்தழுவி உற்சாக வரவேற்பு அளித்தனர். மதங்களைக் கடந்து, ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தும் விதமாக, இவ்வாறு சீர் வரிசைகளை எடுத்து ஊர்வலமாகச் சென்றதும், கோயில் நிர்வாகத்தினர் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை ஆரத்தழுவி வரவேற்றதும் நமது நாட்டில் வேற்றுமையிலும் ஒற்றுமையே உள்ளது என்பதை வெளிச்சமிட்டு நிரூபித்துள்ளது.
சாதி மதங்களைக் கடந்து, மத ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தும் விதமாகக் கும்பாபிஷேகம் தர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீ நாமபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு ஆலங்குடியில் உள்ள புனித அதிசய அன்னை ஆலயத்திலிருந்து பங்குத்தந்தை ஆர்.கே.சாமி தலைமையிலும், அதேபோல் பெரிய பள்ளிவாசல் மற்றும் கலிபுல்லா நகர் ஜும்ஆ பள்ளிவாசலிலிருந்து தேங்காய், பழம், பூ தட்டுகளுடன் சீர்வரிசை எடுத்து ஊர்வலமாக வந்தனர். சீர்வரிசை எடுத்து வந்த கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியச் சமுதாயத்தினரைக் கோயில் நிர்வாகத்தினர் ஆரத்தழுவி மேளதாளங்கள் முழங்க வரவேற்றனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.