"சாராய சாவுக்கு காரணமான திமுக அரசு பதவி விலக வேண்டும்" - முன்னாள் அமைச்சர் காமராஜ் வலியுறுத்தல்! - admk
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர்: தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு, கொலை கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் கட்டுப்படுத்த தவறியதாகக் கூறி திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (மே 29) நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், சட்ட ஒழுங்கு சீர்கேடுகளுக்கான முழு பொறுப்பையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்று, உடனடியாக பதவி விலக வேண்டி வலியுறுத்தி திமுக அரசைக் கண்டித்து அதிமுக கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல் தஞ்சாவூரில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், ரயிலடி பகுதியில் நேற்று (மே 29) மாலை கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான காமராஜ் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். அப்போது அந்த உரையில், “திமுகவை எதிர்ப்பவர்தான் அதிமுகவிற்குத் தலைவராக இருக்க முடியும். பொதுச் செயலாளராக இருக்க முடியும். திமுகவிற்குத் தோள் கொடுப்பவர்கள், திமுக ஆட்சிக்குத் துணை போகிறவர்கள். அவர்கள் அதிமுகவிற்குத் தலைவராக இருக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “அதிமுகவைக் காட்டிக் கொடுத்தார்கள். அதனால்தான் இன்றைக்கு அவர்கள் தூக்கி எறியப்பட்டு இருக்கிறார்கள். திமுகவிற்குத் துணை போகிற அவர்களை அதிமுக தொண்டன் ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டான். அரசியல் ரீதியாக அதிமுகவும் திமுகவும் எதிர்க்கட்சிகள். திமுகவினரை ஆதரிப்பவர்கள் அதிமுகவின் நிர்வாகியாக இருக்க முடியாது.
அதனால்தான் இன்றைக்கு ஓ.பி.எஸ் போன்றவர்கள் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார். மேலும் அவர், “திமுக ஆட்சிக்கு வரும் போது பிரச்னை வரும், இரண்டு ஆண்டுகளில் மோசமான ஆட்சியைத் தமிழ்நாட்டில் நடத்துகிறார்கள். வேறு மாநிலத்தில் யாரும் கிடையாது நமது தமிழ்நாட்டில் ஒரே மாதத்தில் கள்ளச்சாராயத்தால் 23 பேர் இறந்து உள்ளனர். தஞ்சையிலும் 2 பேர் இறந்துள்ளனர்.
அனைத்து துறைகளிலும் திமுக தோற்றுப் போய் விட்டார்கள். கள்ள சாராய சாவுக்கு காரணமான திமுக அரசு பதவி விலக வேண்டும்” என்று கூறி, இந்த துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜியும் பதவி விலக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
பின்னர், திமுக அரசை கண்டித்து கண்டன பதாகைகளை ஏந்தி அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இக்கூட்டத்தில் அவைத் தலைவர் திருஞான சம்பந்தம், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திருஞானம், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், பால்வளத் தலைவர் காந்தி, கவுன்சிலர் கோபால், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 4வது நாளாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை..சச்சிதானந்தம் வீட்டில் கிடைத்தது என்ன?