மீண்டும் ஒரு செல்பி வீடியோ.. காத்திருந்த ரசிகர்களோடு விஜய் செய்த சம்பவம்!
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பாளையங்கோட்டை கேடிசி நகர் மாதா மாளிகையில் இன்று நடைபெற்றது.
நடிகர் விஜய் இந்த நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்டு, இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,500 பேருக்கு அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும், வீடுகளை இழந்த நபர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு 25,000 நிதி உதவியும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறும் கேடிசி நகர் மாதா மாளிகைக்கு வந்தார். இதற்கிடையில், நடிகர் விஜய் வரும் தகவலை அறிந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கே திரண்டனர்.
ஆனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமே நிகழ்ச்சி அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாகவே அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் விஜய்யை காண முடியாமல் மண்டபத்தின் வெளியே ஆரவாரத்தோடு காத்திருந்தனர். மேலும், நிகழ்ச்சி முடியும் நேரத்தில் ரசிகர்கள் கடும் கட்டுப்பாட்டையும் மீறி, கூட்டத்தோடு கூட்டமாக நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைந்தனர்.
அப்போது அனைவரும் தளபதி விஜய்.. விஜய்.. என கோஷங்கள் எழுப்பினர். இதை அடுத்து, நிகழ்ச்சி முடிந்த பிறகு நடிகர் விஜய் மேடையில் இருந்தபடி, ரசிகர்களை நோக்கி செல்போனில் செல்பி வீடியோ எடுத்து, தனது உற்சாகத்தை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.