திருச்சி சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயில் தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு - திருச்சி சமயபுரம்
🎬 Watch Now: Feature Video
திருச்சி: மண்ணச்சநல்லூர் அருகே உள்ள இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயில் மாசித் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அம்மன் கோயில்களில் பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலின் முதன்மையாக விளங்குவது இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதிமாரியம்மன் கோயில் ஆகும்.
இந்த கோயிலின் மாசித் தேர்திருவிழா கடந்த மாதம் பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கியது. ஆதிமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் முறையே சிம்மம், யானை, ரிஷபம், அன்ன வாகனங்களில் எழுந்தருளினார்.
நேற்று (மார்ச்.04) குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (மார்ச். 05) காலை நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு மேளதாளங்கள் முழங்க, அதிர்வேட்டுகளுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோடும் வீதி வழியாக வலம் வந்த தேர் மீண்டும் நிலையை வந்தடையும். தேரோட்டத்தை ஒட்டி, ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிச் சட்டி எடுத்தும் கோயிலை அடைந்து பயபக்தியுடன் அம்மனை வழிபட்டனர். தேரோட்டத்தையொட்டி பல்வேறு அமைப்புகளின் சார்பாக ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.
லால்குடி சரக காவல் துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
இதையும் படிங்க: குமரி பசுமை சங்கம் நடத்திய "பாரம்பரிய உணவு திருவிழா"