சிவகங்கையில் களைகட்டிய மீன்பிடி திருவிழா!
🎬 Watch Now: Feature Video
சிவகங்கை: பிள்ளையார்பட்டி அருகே உடையனேந்தல் கிராமத்தில் ஆண்டுதோறும் கோடைக் காலத்தின் துவக்கத்தில் நடைபெறும் மீன் பிடித் திருவிழாவில் சுற்றுப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான மக்கள் கச்சா, ஊத்தா ஆகிய பாரம்பரிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன் பிடிப்பது வழக்கமாகும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடித் திருவிழா இன்று(மார்ச் 11) பாரம்பரிய முறைப்படி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்டகிராம மக்கள் கலந்துக் கொண்டு கச்சா, ஊத்தா ஆகிய உபகரணங்களை கொண்டு மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனர்.
இந்த மீன்பிடித் திருவிழாவில் கட்லா, ரோகு, மிருகால், சிசி கெண்டை, ஜிலேபி கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் பெருமளவில் கிடைத்ததால் மீன்பிடித் திருவிழாவில் கலந்துக்கொண்ட கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மீன்பிடித் திருவிழாவானது காலையில் 9 மணிக்கு துவங்கி 10.40 அளவில் நிறைவு பெற்றது. சாதி மதபேதமின்றி நடைபெற்ற இந்த மீன்பிடித் திருவிழாவானது சமத்துவத்தை போற்றும் வகையில் அமைந்ததாக கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.