தீப்பெட்டி ஆலை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து - பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்! - கோவில்பட்டி

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 24, 2023, 12:34 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளத்தில் செயல்பட்டு வரும் தொழிற்பேட்டையில் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், முகமது இஸ்மாயில் ஆகியோருக்குச் சொந்தமான கோவில்பட்டி மேட்ச் கம்பெனி என்ற தீப்பெட்டி ஆலை செயல்பட்டு வருகிறது. அந்த ஆலையின் அலுவலகத்தில் இன்று (ஜூலை 24) காலையில் திடீரென அதிகளவில் புகைமூட்டம் வந்துள்ளது. 

இதையடுத்து அங்கு பாதுகாப்பில் இருந்த பாதுகாவலர்கள் அலுவலக அறைக்குச் சென்று பார்த்தபோது தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  இதனைத்தொடர்ந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

அலுவலகத்தில் இருந்த கோப்புகள், தீப்பெட்டி இயந்திரங்களுக்குத் தேவையான உபகரணங்கள் ஆகியவை முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் ரூ.12 முதல் 15 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. காலை என்பதால் பணியாளர்கள் யாரும் வரவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் தீயணைக்க வந்த தீயணைப்புத் துறையினர் பயன்படுத்திய குழாயில் (பைப்) ஆங்காங்கே ஓட்டைகள் இருந்து தண்ணீர் பீய்ச்சியடித்து அதிக அளவு வெளியே சென்றதால், தண்ணீர் இல்லாமல் சிறிது நேரம் தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து டிராக்டர் மூலம் தண்ணி கொண்டுவரப்பட்டு தீ அணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.