Dindigul - தலையில் தேங்காய் உடைக்கும் விநோதத் திருவிழா! - தேங்காய்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: கோபால் பட்டி, கம்பிளியம்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டியில் ஆடி 18 பெருவிழாவை முன்னிட்டு மகாலெட்சுமி, மகாவிஷ்ணு, சென்னப்பன், வீரபத்திரன் ஆகிய கோவில் திருவிழா ஆடி மாதம் 2ஆம் தேதி சாமி சாட்டுதலுடன் துவங்கியது.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக காப்புக் கட்டி விரதத்தைத் துவங்கினர். அதன் ஒருபகுதியாக மகாலட்சுமி அம்மனிடம் ஆண்கள், பெண்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் என அனைவரும் தங்களது வேண்டுதல்களை முன்வைத்தனர்.
வேண்டுதல்கள் நிறைவேறியதால் இரண்டு நாள் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான இன்று (ஆகஸ்ட் 04) திருவிழாவில் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஊரின் அருகில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே இருந்து மகாலட்சுமி அம்மனை அலங்கரித்து பூஜை செய்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
அப்போது வரும் வழியில் உள்ள வீடுகளில் பக்தர்கள் அம்மனுக்குச் சிறப்புப் பூஜை செய்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து, சந்நிதிக்கு வந்த அம்மனுக்குப் பூஜை செய்த பின்னர் பூசாரிகள் ஆணி செருப்பு மீது நின்று அம்பு போட்டு நெய் கம்பம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
இதனை அடுத்து குழந்தை இல்லாதவர்கள், உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர்கள், திருமணம் ஆகாதவர்கள் வேண்டுதல் நிறைவேறியதால் 15 நாட்கள் விரதம் இருந்த ஆண், பெண் பக்தர்களை வரிசையாகத் தரையில் அமரவைத்து அவர்கள் தலைமையில் தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றப்பட்டது.
இதன் பின்னர் காத்து கருப்பு இருக்கும் என்று நினைத்து பூசாரியிடம் சாட்டை அடி வாங்கினர். இதில் பழனி, தேனி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.