காவல் நிலையம் எதிரே உள்ள டீக்கடை சூறையாடல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்! - Vellore News in Tamil
🎬 Watch Now: Feature Video
Published : Nov 12, 2023, 1:53 PM IST
வேலூர்: பள்ளிகொண்டா பேருந்து நிலையம் அருகே பாபு மற்றும் சிவா ஆகியோருக்குச் சொந்தமாக டீக்கடை ஒன்று இயங்கி வருகிறது. மேலும், இருவருக்கும் வியாபார ரீதியாக தொழில் போட்டி ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு (நவ.11) வெட்டிவானம் பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவர் மதுபோதையில் பாபுவை தகாத வார்த்தைகளைப் பேசி தகராறு செய்துள்ளார். மேலும் பாபுவின் டீக்கடையையும் அடித்து நொறுக்கியுள்ளார்.
இதனையடுத்து கடையின் உரிமையாளரான பாபு, பள்ளிகொண்ட காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ராஜி என்பவரைத் தேடி வருகின்றனர்.
இதன் முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக கடையை சேதப்படுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இது தொடர்பான காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பள்ளிகொண்டா காவல் நிலையம் எதிரே இருக்கும் டீக்கடையை ஒருவர் அடித்து சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.