coutrallam season: குற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்..! வார விடுமுறையை கொண்டாடும் சுற்றுலாப் பயணிகள்!
Published : Nov 5, 2023, 2:16 PM IST
தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
மேலும், அவ்வப்போது அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கும் ஏற்படும் சூழலில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தடைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால், தற்போது குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அணைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீராக உள்ளது.
இந்த நிலையில், இன்று (நவ. 5) ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினம் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு படையெடுத்து உள்ளனர். அருவிகளில் உற்சாக குளியல் போட்டும், கரையோரம் நின்று குடும்பத்துடன் செல்பி எடுத்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்து வருகின்றனர்.
தற்போது தென்காசி மாவட்டத்தில் மழை பொழிவு காரணமாக, வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்றுடன் இதமான சூழல் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இதனால் சுற்றுவட்டார வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.