புகையிலைப்பட்டியில் மீன்பிடி திருவிழா - ஆர்வத்துடன் மீன்களைப் பிடித்த மக்கள்! - மீன்பிடி திருவிழா
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் அருகே உள்ள புகையிலைப்பட்டியில் பெரியகுளம் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்தக் குளம் வறண்டு கிடந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக தண்ணீர் நிரம்பியது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் சுமார் 10 ஆயிரம் மதிப்புள்ள மீன் குஞ்சுகளை வாங்கி விட்டனர். மீன்கள் நன்கு வளர்ந்த நிலையில் தண்ணீர் வற்றியதால் இன்று ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்ட மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
பரந்து விரிந்த இந்தக் குளத்தில் மார்பு அளவிற்கு தண்ணீர் இருந்தது. இருந்த போதும் கரையில் சுற்றி திரண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்களும் ஒரே நேரத்தில் குளத்தினுள் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த வலை மற்றும் கச்சாவால் மீன்களைப் பிடித்தனர்.
இதில் கட்லா, ரோகு, விரால், அயிரை என சிறு மீன்கள் முதல் 10 கிலோ எடை உள்ள மீன்கள் வரை பிடிபட்டன. கிடைத்த மீன்களை மகிழ்ச்சியுடன் கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றனர். சமூக ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் நடைபெற்ற இந்த மீன்பிடி திருவிழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர் .