Arikomban statue: கேரளாவில் அரிக்கொம்பனுக்கு 8 அடி உயர சிலை - நன்றி காட்டும் அன்பர்! - theni
🎬 Watch Now: Feature Video
தேனி: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் கஞ்சிக்குழி பகுதியைச் சேர்ந்தவர், பாபு. இவர் அரிக்கொம்பன் பிறந்து வளர்ந்த சின்னக்கானல் என்ற இடத்தில் இஞ்சி விவசாயத்தை மேற்கொண்டு வந்தார். அப்போது அவ்விடத்தில் உலா வந்த அரிக்கொம்பன் யானை, இஞ்சி விவசாயம் செய்திருந்த பாபு நிலத்தின் வழியாக மிதித்துச் சென்று உள்ளது. இதனால் பயிர்கள் சேதமடைந்தது. இதனால் கவலை அடைந்து மனமுடைந்தார், பாபு.
இதனையடுத்து மீண்டும் அவ்விடத்தில் இஞ்சி விவசாயத்தை மேற்கொண்டு உள்ளார். அப்போது பாபுவிற்கு நல்ல விளைச்சல் ஏற்பட்டு, அவர் எதிர்பார்க்காத வகையில் நல்ல வருமானமும் கிடைத்து உள்ளது. இதன் காரணமாக பாபுவின் குடும்பத்தினர் அரிக்கொம்பன் யானையை தங்களின் குலதெய்வமாக வழிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அரிக்கொம்பன் யானை கேரளாவிலிருந்து பிடித்துச் செல்லப்பட்ட நாள் முதல் அக்குடும்பத்தினர் சற்று மனஉளைச்சலில் இருந்து உள்ளனர்.
குறிப்பாக அவரது குழந்தை, அரிக்கொம்பன் யானை எப்பொழுது வரும் என்று கேட்டு அழுது வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின், குடும்பத்தினரும் அந்தக் குழந்தையை சமாதானப்படுத்தி வந்தனர். இதன் இடையே அரிக்கொம்பன் யானை தேனி மாவட்டத்திலிருந்து பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு திருநெல்வேலி மாவட்டம், அப்பர் கோதையார் முண்டந்துறை வனப்பகுதியில் விடுவித்தனர்.
தற்போது அரிக்கொம்பன் யானை நலமாக இருப்பதாக செய்திகள் வெளிவருவதால் பாபுவின் குடும்பத்தினர் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர். மேலும், அரிக்கொம்பன் யானை தண்ணீர் குடிப்பதும், புற்களை தண்ணீரில் கழுவி உண்பதும் போன்ற வீடியோக்கள் வெளிவந்த நிலையில் அந்த வீடியோக்களைக் கண்ட பாபுவின் குழந்தை மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் விவசாயி பாபு தனது வியாபார நிறுவனத்தின் அருகே சிற்பி ஒருவரின் துணையுடன் இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து எட்டு அடி உயரத்தில் அழகான அரிக்கொம்பன் யானையின் சிலையினை வடிவமைத்து உள்ளார். இவரின் இத்தகைய செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அரிக்கொம்பன் யானையின் மீது கொண்ட நன்றி மற்றும் அன்பின் காரணமாக இந்த சிலையை வடிவமைத்து உள்ளதாக விவசாயி பாபு கூறியுள்ளார்.