Viral Video: "கவர்மெண்டுக்கே கை கொடுப்போம்" - துண்டு போட்டு தோள் கொடுத்த மதுப்பிரியர் - government bus
🎬 Watch Now: Feature Video
தென்காசி: தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு பாவூர்சத்திரம் வழியாக சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பாவூர்சத்திரத்தில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்தில் வந்த போது பேருந்தின் படிக்கட்டு சாலையோரம் இருந்த தடுப்பில் பட்டு சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அந்த வழியே பயணிகள் ஏறவும் இறங்கவோ முடியாத அவலநிலை ஏற்பட்டது. இதையடுத்து பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். இதனால் ஆலங்குளம் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் மாற்று பேருந்துகள் இல்லாததால் வெகு நேரம் பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தின் முன் பகுதியில் காத்திருந்தனர்.
அப்போது பெண்கள் மற்றும் கை குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள் மிகவும் அவதி அடைந்தனர். நள்ளிரவு நேரத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால், நீண்ட நேரம் பேருந்து நிலையத்திலேயே பயணிகள் கொசுக்கடியில் காத்திருந்தனர். இது குறித்து தென்காசி பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அப்போது மதுப்பிரியர் ஒருவர் நான் சரிசெய்கிறேன் என தனது கையில் இருந்த துண்டால் படிக்கட்டினை சரி செய்ய முயற்சித்து பெரும் அட்டகாசம் செய்து வந்துள்ளார். அரசு பேருந்தின் படிக்கட்டு உடைந்ததால் பயணிகள் பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்திலேயே பலமணி நேரம் காத்துக் கிடந்தாலும் மது பிரியர் செய்த அட்ராசிட்டி சம்பவம் அங்கிருந்தவர்களை கலகலப்பில் ஆழ்த்தியது. அவர் செய்த அந்த செயலை பாராட்டுவதா?... திட்டுவதா? எனத் தெரியாமல் பயணிகள் நின்றனர்.
அதைத் தொடர்ந்து, சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பின்னர் வந்த மாற்று பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி சென்றது.