விமானப்படை அதிகாரி ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து.. சாலை தடுப்பில் கார் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.. - Sulur car accident
🎬 Watch Now: Feature Video
கோவை மாவட்டம் சூலூரில் விமானப் படை விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் பழுது நீக்கம் மற்றும் வீரர்களுக்கு விமான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட விமானப்படை ஊழியர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விமான படைத்தளத்தில் பணியாற்றி வரும் அதிகாரி ஒருவர், நேற்று (ஜூலை 9) மாலை சிங்காநல்லூரில் செயல்பட்டு வரும் பயிற்சி பள்ளியில் பயின்று வரும் தனது மகளை விடுவதற்காக சென்றுவிட்டு, விமானப்படை தளத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அப்போது சூலூர் ரங்கநாதபுரம் அருகே அவர் ஓட்டி வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக விமானப்படை அதிகாரி உயிர் தப்பியுள்ளார். சம்பவம் குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார், அதிகாரியை மீட்டு சிகிச்சைக்காக விமானப்படை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவர் ஓட்டி வந்த கார் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.