நீலகிரியில் சிறுத்தை தாக்கியதில் தீயணைப்புத் துறையினர் 6 பேர் படுகாயம்!
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: குன்னூர் பகுதியில் சிறுத்தை தாக்கியதில் தீயணைப்புத் துறையினர் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டமானது அடர்ந்த வனங்கள் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் கரடி, காட்டெருமை, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவ்வனவிலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேவைக்காகக் குடியிருப்பு பகுதியில் வலம் வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது.
மேலும், சமீப காலமாக குன்னூரில் உள்ள குடியிருப்பு பகுதியில் வலம் வரும் சிறுத்தைகள், வீட்டின் வளர்ப்பு நாய்களை வேட்டையாடிச் செல்வதும் வாடிக்கையாக உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், அங்கிருக்கும் சிசிடிவியில் சிறுத்தை ஒன்று நாய்க் குட்டியை விரட்டும் காட்சிப் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள புருக்லேண்ட்ஸ் பகுதியில் பழமையான கட்டடத்தில் சிறுத்தை உள்ளிருப்பதாகத் தீயணைப்புத் துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர், தீ பந்தங்களுடன் சிறுத்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், எதிர்பாராத விதமாக உள்ளிருந்த சிறுத்தை, அங்கிருந்தவர்களைத் தாக்கியது. இதில் செய்தியாளர் உட்படத் தீயணைப்புத் துறையினர் ஆறு பேர் காயம் அடைந்தனர். இதனையடுத்து, சிறுத்தை தாக்கி காயமடைந்தவர்களுக்கு குன்னூர் மற்றும் உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.