கொதிக்கும் சோற்றை தலையில் அடித்து சாமியாட்டம்.. கள்ளவாண்ட கோயில் திருவிழா! - தூத்துக்குடி மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரசர்குளம் கிராமத்தில் கள்ளவாண்ட சுவாமி கோயில் உள்ளது. அந்த கோயிலில், 2 வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை நடைபெறும் திருவிழாதான் இந்த கோயிலின் முக்கிய நிகழ்ச்சியாகும்.
தற்போது இந்த திருவிழாவை முன்னிட்டு, காலை கருங்குளத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, ஊரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம் முழங்க வருகை தந்தனர். அதை தொடர்ந்து சுவாமி கள்ளவாண்டருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. அதன்பின் நள்ளிரவு 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்து, சுவாமியாடி வேட்டைக்குச் சென்றார்.
பின்னர் இரவு 1 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வேட்டைப்பானை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காகக் கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் 36 பிரமாண்ட பானையில் பனை ஓலைகளைக் கொண்டு நெருப்பு மூட்டி, கஞ்சி காய்ச்சுவார்கள். கஞ்சி காய்ச்சும் நேரத்திலேயே நையாண்டி மேளம், உருமி மேளம் மற்றும் வில்லிசைப் பாடலாக, கள்ளவாண்ட சுவாமி கதை சொல்லப்பட்டது.
அந்தக் கதையைக் கேட்டு அருள் முற்றும் சுவாமியாடிகள், பானைக்கு அருகில் சென்று தென்னம்பாளையைப் பானைக்குள் விட்டு சுடு கஞ்சியை எடுத்துத் தன் தலையில் ஊற்றிக் கொண்டபடி அருளோடு ஆடுவார். அதை அங்கு இருந்த பக்தர்கள் கண்ணிமைக்காமல் பார்த்துப் பரவசமடைந்தனர்.