பட்டியலின மக்களுக்கு இலவச பட்டாக்களை வழங்கிய கலெக்டர்: மலைக்கிராமத்திற்கு நடந்து சென்று ஆய்வு
🎬 Watch Now: Feature Video
கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த இருதுக்கோட்டை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. வழக்கமாக நாற்காலிகள் அமைத்து நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம் இன்று பொதுமக்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் தரையில் அமர்ந்தே பங்கேற்றிருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாற்றுத்திறனாளி நபரின் கோரிக்கை மனுக்களை கனிவாக பெற்றுக்கொண்டார்.மூன்று கிராமங்களைச் சேர்ந்த 108 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைகளை வழங்கியதுடன், ஒரே கிராமத்தில் 81 பட்டியல் மற்றும் பழங்குடியின சமூக பயனாளிகள் இலவச வீட்டுமனை பட்டாவினை பெற்றுக்கொண்டு, தங்கள் பகுதியினை பார்வையிட கோரிக்கை வைத்தனர்.
இருதுக்கோட்டை கிராமத்திற்கு அருகே திருமா நகர் என்னும் பெயர் கொண்ட மலைக்கிராமத்திற்கு 2 கி.மீ. தூரம் சார் ஆட்சியர் சரண்யா, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் கரடு முரடான பாதையில் நடந்தே சென்று அங்குள்ள குடிசை வீடுகளை பார்வையிட்டு அடிப்படை வசதிகளை கேட்டறிந்ததுடன் குடிநீருக்காக புதிய போர்வெல், நூலகம், சமுதாயக் கூடம், தார்சாலை உள்ளிட்டவை அமைத்து தருவதாக உறுதியளித்துள்ளனர்.
மேடான மலைக்கிராமத்திற்கு அரசியல்வாதிகள், வருவாய் அதிகாரிகள் வந்து செல்லவே யோசிக்கும் நிலையில் 11 ஆண்டுகால கோரிக்கையான இலவச வீட்டுமனைகளின் பட்டாக்களை வழங்கியதுடன் நேரில் பார்வையிட்டு மேலும் வசதிகள் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்திருப்பது அப்பகுதி மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: போலி வீடியோ விவகாரம் - மணீஷ் காஸ்யப்பை தேசிய பாதுகாப்புச் சட்டப்படி சிறையில் அடைக்க ஆளுநர் ஒப்புதல்