Krishnagiri: 4 தலைமுறைகளாக பட்டா கேட்டுப் போராடும் மக்கள் - krishnagiri collectorate
🎬 Watch Now: Feature Video
கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த தளி சட்டமன்றத்தொகுதி கோலட்டி ஊராட்சிக்குட்பட்டது, பிக்கனப்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் 300க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. 4 தலைமுறைகளாக வசித்துவரும் நிலையில் பலருக்கும் பட்டா வழங்கப்பட்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி இருந்தாலும் 55 வீடுகளுக்கு இன்று வரை பட்டா வழங்கப்படவில்லை.
இது குறித்து ஓசூர் திமுக எம்எல்ஏ, தளி கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஆகியோர் மூலம் மாவட்ட ஆட்சியரை பலமுறை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஓசூர் சார் ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தும் இதற்கான பதிலோ, பட்டா வழங்க இத்தனை நாட்களாகும் என்றோ எவ்வித பதிலும் அளிக்காமல் சென்றுவிட்டனர்.
இதையடுத்து, திமுக ஊராட்சி மன்றத் தலைவர் நாராயணப்பா தலைமையில் கிராம மக்கள் அரசின் கவனத்தை ஈர்க்க வீடுகளில் கருப்பு கொடிகளைக் கட்டி பட்டா வழங்க வேண்டும் என்கிற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் நாராயணப்பா கூறுகையில், ''சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டை கொண்டாடி முடித்துவிட்டோம். ஆனால், எங்கள் கிராமத்தில் 55 வீடுகளுக்கு இன்றும் பட்டா வழங்கவில்லை.
வீடுகளுக்கு பட்டா இல்லாததால் ஊராட்சி சார்பில் தொகுப்பு வீடுகள் கட்ட ஒதுக்கீடு செய்ய முடியவில்லை. வீடு கட்ட வங்கிக் கடன்கள் பெற முடியவில்லை என்கிற சூழலில் இருந்து வருகிறார்கள். எனவே, தமிழக அரசு இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள இருக்கிறோம்’’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.