டெல்லி: இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், “நாடு முழுக்க மருத்துவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும். தடுப்பூசிக்கு எதிரான தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், “நாடு முழுக்க கோவிட் பரவலின்போது 1,400க்கும் மேற்பட்ட மருத்துவர்களை இழந்துள்ளோம். கரோனா பரவலின் இரண்டாம் அலை எங்களுக்கும் கடுமையான மனவேதனை மற்றும் இழப்பை அளித்துள்ளது.
இந்தத் தொற்றுநோய்க்கு மத்தியில், நாட்டில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ முன்களப் பணியாளர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் ஆங்காங்கே நடக்கின்றன.
இதைக் கண்டு நாங்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். கரோனா தடுப்பூசிக்கு எதிரான தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இவர்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடிதத்தில் பாபா ராம்தேவ் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்தும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் (வன்முறை மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்) மசோதா, 2019இல் ஒருவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அனைவருக்கும் இலவச தடுப்பூசி- பிரதமர் நரேந்திர மோடி!