சென்னை: மழை இயற்கையின் அழகை ரசிக்கக் கிடைத்த ஒரு வரம். அமைதியான சூழலில் மழையை ரசித்துக்கொண்டே ஒரு டீ குடித்தால் அது இன்பத்தின் எல்லை. கார்மேகம் சூழ, இடி மின்னல் சத்தம் இசைக்க, மழைத்துளி மண்ணில் வந்து விழும்போது வரும் மண் மணம் மனதை மணக்கச் செய்யும்.
கொடை வெயிலில் தவியாய் தவித்து மழையின் குளிரில் போர்வைக்குள் குறுக்கிக்கொண்டு உறங்க ஆசைப்படாத மனிதர்கள் உலகில் உண்டா என்ன? சிலர் இந்த மழையின் அழகை ரசிப்பதற்காகக் காடு, மலைகள் தேடி புதுவித அனுபவத்தை ஆர்ப்பரிக்கச் செல்வது உண்டு. அவர்களுக்கானது தான் இந்த தொகுப்பு.
நீங்கள் இந்த மழைக்காலத்தில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடும்போது சில வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுங்கள். அது உங்கள் பயணத்தை மேலும் இனிமையானதாகவும், சுலபமானதாகவும் மாற்றி அமைக்கும்.
வானிலை அறிவிப்பைத் தெரிந்துகொள்ளுங்கள்; நீங்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் முன்பு நீங்கள் செல்லவிருக்கும் பகுதி தொடர்பான வானிலை அறிவிப்பைத் தெரிந்துகொள்ளுங்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பருவமழை பொழியத் தொடங்கியுள்ள நிலையில், உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும். அதைக் கவனத்தில் கொண்டு பயணிக்க வேண்டும்.
சரியான ஆடைகளை எடுத்துச் செல்லுங்கள்; மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். குளிர் இருக்கும். அதனால் அதற்குத் தகுந்தார்போல் ஆடைகளை எடுத்துச் செல்லுங்கள். விரைவில் உலரக்கூடிய வகையில் உள்ள ஆடைகளைக் கையில் வையுங்கள். மேலும் குடை, ரெயின் கோட் போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். நீர்புகாத வகையில் உள்ள காலணிகளைப் பயன்படுத்துங்கள்.
உடைமைகளைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்; எதிர்பாராத மழைப் பொழிவு உங்களை மட்டும் இன்றி உங்கள் உடைமைகளையும் சேதப்படுத்தலாம். குறிப்பாக மொபைல் ஃபோன், மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு பொருட்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். நீர்புகாத வகையில் உள்ள பணப்பைகளை எடுத்துச் செல்லுங்கள்.
நோய்வாய்ப்படுவதைத் தவிர்க்க சில நடவடிக்கைகள்; மழைக்காலத்தில் அசுத்த நீர் மற்றும் தொற்று கிருமிகளால் நோய்வாய்ப்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது. இதனால் சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பருகுங்கள்.
அவசரத் தேவைக்கான மருந்து மற்றும் பொருட்கள் அடங்கிய கிட் ; நீங்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போது சாதாரணமாக ஏற்படும் காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் போன்ற நோய்களுக்கான மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: ஆண்கள், பெண்கள் யார் அதிக மகிழ்ச்சியாக இருப்பது? - ஆய்வில் வெளியான தகவல்!