அமுக்கராங்கிழங்கு என்ற அஸ்வகந்தா சித்த, ஆயுர்வேத மருத்துவத்திலும், கை வைத்தியத்திலும் காலங்காலமாக பயன்படுத்தப்பட்டுவருகிறது. இது தூக்கமின்மை, மன அழுத்தம், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க எனப் பலவற்றிற்கு அருமருந்தாகப் பயன்படுகிறது. எளிதில் தாக்கக்கூடிய எலும்பு தேய்மானம், எலும்பு முறிவினைத் தடுக்கும்.
இதனை குளிர்கால செர்ரி, இந்தியன் ஜின்ஸெங் என அழைக்கின்றனர். இதை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து ஆயுர்வேதாவில் முனைவர் பட்டம் பெற்ற மருத்துவர் ரங்கநாயக்குலுவிடம் பேசினோம். சொலானேசியே குடும்பத்தைச் சேர்ந்த அஸ்வகந்தா, வறண்ட காலத்தில் நன்றாக வளரும். விதானியா சோம்னிஃபெரா என்பது இதன் தாவரவியல் பெயர். உலர்ந்த தண்டு, தூள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் அஸ்வகந்தா சந்தையில் எளிதாக கிடைக்கிறது.
பலன்கள்
ஐசோமேனியா: அஸ்வகந்தாவை (அமுக்குரா) 2 அல்லது 4 கிராம் இரவில் வெதுவெதுப்பான பாலில் சர்க்கரைக் கலந்து குடித்தால், நன்றாகத் தூக்கம் வரும். ஸ்ட்ரெஸ் இருப்பவர்களுக்கு மனம் அமைதியாகும்.
எடை அதிகரிக்க: 4 பங்கு நெய்யில் ஒரு பங்கு அஸ்வகந்தாவை நன்கு வறுத்து 10 பங்கு பால் சேர்த்து அருந்தினால் எடை அதிகரிக்கும்.
புத்துணர்வுக்கு...
- 1 முதல் 3 கிராம் அஸ்வகந்தா தூளை 15 நாள் பால் அல்லது நெய் அல்லது வெதுவெதுப்பான நீரில் எடுத்துக் கொண்டால் புத்துணர்ச்சி கிடைக்கும். எடை அதிகரிக்கவும் உதவும்.
- பதற்றம், நரம்புத் தளர்ச்சி போன்றவற்றைக் குறைக்க அஸ்வகந்தா உதவுகிறது.
- உடல் பலவீனம், பசியின்மை, இருமல், ரத்தம் குறைவு, வாயுக் கோளாறுகள், வாத நோய்கள் போன்றவற்றை சரி செய்யும்.
- இதன் இலைகளுடன் மிளகு சேர்த்து தண்ணீரில் நன்றாகக் கொதிக்கவைத்து வழங்க, காய்ச்சலின் தீவிரம் தணியும்.
- காய்ச்சல், வலி நிவாரணி, அழற்சியை சரிசெய்வது எனப் பல பரிமாணங்களில் செயல்படும்
அளவு
குழந்தைகள்: 500 மி.கி.
பெரியவர்கள்: 1 கிராம் முதல் 3 கிராம் (அ) திரவம் : 10 முதல் 20 மில்லி
முக்கியப் பலன்கள்
- தூக்கத்தை அதிகரிக்கும்
- கொழுப்பைக் குறைக்கும்
- எடையை அதிகரிக்கும்
- நினைவாற்றலை அதிகரிக்கும்
- தசைகளைப் பலப்படுத்தும்
- புற்றுநோயைத் தடுக்கும்
- உடலை வலிமைப்படுத்தும்
- எலும்புகளுக்கு நல்லது
கவனம் தேவை
அஸ்வகந்தா நல்ல மருந்தாக இருப்பினும் மருத்துவரின் பரிந்துரையுடனே உண்ணுங்கள். குறிப்பாக, தைராய்டு சுரப்பியில் ஹைப்பர் அல்லது ஹைப்போ பிரச்சினை உடையவர்கள் மருத்துவரை ஆலோசிப்பது கட்டாயம்.
கர்ப்ப காலத்தில் அஸ்வகந்தா ஏற்றதல்ல. இது முன்கூட்டிய பிரசவத்திற்கு அதாவது குறைப் பிரசவத்திற்கு வழிவகுக்கும். பிரசவித்த பால் புகட்டும் தாய்மார்கள் அஸ்வகந்தாவைத் தவிர்க்க வேண்டும்.