சென்னை: தீபாவளி பண்டிகை வருவதை அடுத்து ஸ்வீட் மற்றும் கார வகைகளின் தயாரிப்பு மற்றும் விற்பனை களைக்கட்டும். இந்த நேரத்தில் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் விற்பனையை அதிகரிக்கும் வகையில், வாடிக்கையாளர்களின் கண்களைக் கவரும் விதத்தில், பலவகையான பலகாரங்களை, பல நிறங்களில் வைத்திருப்பர். இந்த நிறங்கள் நம் ஆசையைத் தூண்டும். இதை வாங்கி சாப்பிடுவதால் பல பாதிப்புகள் வரலாம்.
ஆகவே இந்த நேரத்தில், விழிப்புடன் இருந்து இது போன்ற உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். வியாபார நோக்கில், வாடிக்கையாளர்களின் கண்களைக் கவரும் வகையில் உணவு நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் செயற்கையான பொருள் தான் இந்த நிறமூட்டிகள். இந்த செயற்கை நிறமூட்டிகள் உடல் ஆரோக்கியத்திற்கும், செரிமானத்திற்கும் கேடு விளைவிக்கும்.
கடைகளில் தயாரிக்கப்படும் பலகாரங்களுக்குச் செயற்கை நிறமூட்டிகளை ஒரு குறிப்பிட்ட அளவில் தான் பயன்படுத்த வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி செயற்கை நிறமூட்டிகளை 100 ppm அளவு தான் சேர்க்க வேண்டும். அதையும் மீறி அளவுக்கு அதிகமாக நிறமூட்டிகள் சேர்க்கப்பட்டால் உணவு பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட கடைக்கு மீது நடவடிக்கை எடுக்கும்.
இந்த நிறமூட்டிகள் ஸ்வீட், காரம் போன்ற பண்டங்களில் மட்டுமில்லாமல், நாம் விரும்பி உண்ணும், தந்தூரி சிக்கன், சிக்கன் பக்கோடா போன்றவைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
பாதிப்புகள்: செயற்கை நிறமூட்டிகள் அதிகமாகக் கலந்த பலகாரங்களைச் சாப்பிடும் போது தைராய்டு, புற்றுநோய், ஆஸ்துமா, ஒற்றைத்தலைவலி போன்ற நோய்கள் ஏற்படும். மேலும் இவ்வகையான உணவுகளை அதிகமாகச் சாப்பிடும் பட்சத்தில், எதிர்கால சந்ததியினரும், மரபணு ரீதியிலான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இவற்றை அதிகமாக உண்ணும் பட்சத்தில், நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும்.
குழந்தைகளுக்கு பாதிப்பு: இந்த வகையான உணவுகளை குழந்தைகள் அதிகமாக உண்ணும் போது, தூக்கமின்மை, நினைவாற்றல் இழப்பு, அதிவேகத்தன்மை (Hyper activity) போன்றவை ஏற்படலாம். உணவு நிறமூட்டிகளால் எந்த பயனும் இல்லை. செயற்கை நிறமூட்டிகளை நீக்கி, ஆரோக்கியமான உணவுகளில் கவனம் செலுத்துவது நல்லது.
நிறமூட்டிகள் எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன: இந்த செயற்கையான நிறமூட்டிகள் நிலக்கரி தாரிலிருந்து பெறப்படும் மூலப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை மலிவான விலையில் கிடைப்பதால், அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இப்போது பெட்ரோலியத்திலிருந்தும் தயாரிக்கப்படுகிறது.
உங்கள் பகுதியில் உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு மாறாக பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்தாலோ, பலகாரங்களின் தரத்தில் குறைபாடு இருந்தாலோ, நிறமூட்டிகளை அதிகமாக பயன்படுத்தினாலோ 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண் மூலம் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் அளிக்கலாம்.
இதையும் படிங்க: இந்த தீபாவளிக்கு மத்தாப்பை போல உங்கள் முகம் மிளிர வேண்டுமா?... அப்போ இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!