சென்னை: இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதற்காக பியூட்டி பார்லர்களை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். முகத்தையும், உடலையும் அழகுப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள், முகத்தையும், உடலையும் பராமரிப்பதை தவிர்த்து விடுகின்றனர். இதனால் முடி உதிர்வு, முகப்பரு, முக சுருக்கம், கரும் புள்ளிகள், கருமை, பித்த வெடிப்பு, உதட்டு வெடிப்பு போன்றவை ஏற்படுகின்றன.
இவையெல்லாம் வந்தபின் திரும்பவும் பியூட்டி பார்லர்களை நோக்கி படையெடுக்கின்றனர். முகத்தையும், உடலையும் சரியாக பராமரித்துகொண்டாலே இவற்றை தடுக்கலாம். அதற்காக வாரத்தில் ஒரு நாளையாவது செலவிட்டு, பின்வரும் டிப்ஸ்களை பின்பற்ற வேண்டும். அழகு மற்றும் ஆரோக்கியத்திற்காக தினந்தோறும் நேரம் செலவிட முடியாது. ஆகையினால் வாரத்தில் ஒருமுறையாவது செய்து கொள்ளலாம்.
நாம் செய்ய வேண்டியது:
- வாரத்தில் ஒரு முறையாவது உடலை ஆயில் மசாஜ் செய்வது நல்லது. இதற்காக மூலிகை எண்ணெய்களை பயன்படுத்துவது சிறந்தது. இதனால் மன அழுத்தம் குறையும். சருமம் பொலிவாக மாறும்.
- ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம், ஸ்க்ரப் செய்யலாம். இதனால் சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் வெளியேறிவிடும். காய்ச்சாத பாலில் சிறிது சர்க்கரை சேர்த்து, ஸ்க்ரப்பாகவும் பயன்படுத்தலாம். முகம், கழுத்து, கால், முழுகு போன்ற இடங்களில் ஸ்க்ரப் செய்யலாம்.
- முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்துவதற்கு க்ளன்ஸ் அவசியமாகும். ஆகையினால் வாரத்தில் ஒருமுறையாவது க்ளன்ஸ் உபயோகித்து முகத்தை பொலிவாக வைத்திருக்கலாம். பால் மிகச்சிறந்த க்ளன்சர் ஆகையினால், காய்ச்சாத பாலை க்ளன்சராக உபயோகப்படுத்தலாம்.
- வாரத்தில் ஒருமுறையாவது பேஷியல் செய்ய வேண்டும். பேஷ் பேக்காகவும் போடலாம். பப்பாளி போன்ற பழங்களை பயன்படுத்தலாம். மேலும் முல்தானி மெட்டி, சந்தன பவுடர், நலங்குமாவு போன்றவற்றில் சிறிது ரோஸ்வாட்டர் கலந்து பேஷ் பேக்காக போட்டுக்கொள்ளலாம். இதனால் முகம் பொலிவாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
- வாரத்தில் இருமுறை கண்டிப்பாக தலைக்கு குளிக்க வேண்டும். தலைக்கு குளிப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாக தலையில் எண்ணெய் வைத்து தலைக்கு நல்ல மசாஜ் கொடுக்க வேண்டும். இதனால் முடி வலுவடையும், மேலும் மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை சரி செய்யும்.
- தலைக்கு ஹேர் பேக் போட்டும் குளிக்கலாம். உதாரணமாக, கற்றாழை, முட்டையின் வெள்ளைக்கரு, வெங்காய சாறு போன்றவற்றை பயன்படுத்தலாம்.
- மாதத்தில் ஒருமுறையாவது பெடிக்கியூர் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: விட்டமின் டி அதிகமாக இருந்தால் மார்பக புற்றுநோய் வராதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?