சென்னை: தற்போது பருவமழை பெய்து வரும் நிலையில் காலை குளிப்பதை நினைத்தாலே யாருக்கும் எழவே தோணாது. அதிகாலையில் எழுந்து அந்த குளிரைச் சமாளிப்பது போர் காலத்திற்கு போவது போலத்தான் தோன்றும். இந்த சூழலில் வெந்நீர் இல்லாத குளியலை எடுத்துக் கொள்வது கடினமான ஒன்று.
என்ன தான் மழை அடித்தாலும் பள்ளிக்கும், கல்லூரிகளுக்கு, அலுவலகங்களுக்கும் விடுப்பு எடுக்க முடியாது. இதற்காக அதிகாலையே எழுந்து அவசர அவசரமாகக் குளிர்ந்த நீரில் கை வைத்தால் ஷாக் அடித்தது போல இருக்கும். இந்த தண்ணீரில் முகம் கழுவக் கூட தைரியம் இல்லாதவர்களுக்குக் குளிக்க எங்கிருந்து தைரியம் வரும். இந்த சமயங்களில் உடல் வெந்நீரைத் தேடுகிறது.
முன்பு விரகடுப்புகளில் வெந்நீர் வைத்துக் குளித்து வந்தோம், அது அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறது என அதன் பின்னர் கேஸ் அடுப்புகள் மூலம் வெந்நீர் வைக்க ஆரம்பித்தோம். ஆனால் வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தினமும் அதனைப் பயன்படுத்தி வெந்நீர் வைத்தால் ஒரே வாரத்தில் கேஸ் தீர்ந்து விடும்.
இதற்கான ஒரு தீர்வாகவே குறைந்த விலையில் சூடாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளாத எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர்கள் பயன்பாட்டிற்கு வந்தன. இது உபயோகிப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறது. அதிக விலை கொடுத்து வீட்டில் கீசர் அல்லது சோலார் வாட்டர் ஹீட்டர் பொருத்த முடியாதவர்கள் பெரும்பாலும் இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் குறைந்த விலையுள்ள இந்த வாட்டர் ஹீட்டர்களை உபயோகிப்பதில் ஏதும் அலட்சியப்படுத்தினால் பெரும் விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்பதையும் நாம் நினைவில் கொள்வது அவசியம். இது மின்சாதன பொருள் என்பதால் அதிக முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
- வாட்டர் ஹீட்டர்களை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருங்கள். பிளக்குகள் சரியாக மாட்டப்பட்டுள்ளதா என சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் அதனால் ஷாக் ஏற்படும் அபாயம் உள்ளது.
- சிறு குழந்தைகள் விளையாடும் இடத்தில் ஹீட்டர் வைத்து தண்ணீரை சூடாக்க கூடாது. வீட்டில் எந்த இடத்தில் வைத்துப் பயன்படுத்தினாலும் அதை அணைக்கும் வரை கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும்.
- வாட்டர் ஹீட்டர்களை குளியலறையில் வைத்து பயன்படுத்த கூடாது. அது ஈரமான பகுதி என்பதால் ஷாக் ஏற்படும் அபாயம் உள்ளது.
- இந்த வாட்டர் ஹீட்டர் கம்பிகள் தானியங்கியாக இல்லாமல் மனிதர்களால் இயக்கப்படுபவை. இவற்றில் ஆட்டோ ஸ்விட்ச் ஆஃப் போன்ற ஆப்ஷன்கள் கிடையாது. அதனால் இவற்றை பயன்படுத்திய பிறகு சிறிது நேரம் கழித்து அணைக்க வேண்டும். அதே போல இந்த வாட்டர் ஹீட்டர் கம்பி முழுவதுமாக தண்ணீரில் மூழ்கிய பிறகு அதனை இயக்குவது அவசியம்.
- தண்ணீர் சூடாகி விட்டதா என்பதை தெரிந்து கொள்ள தண்ணீரில் விரலை வைத்து பார்க்க கூடாது. இதனால் ஷாக் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஹீட்டரை அணைத்த பிறகு கூட தண்ணீரை சோதிக்க கை வைக்க வேண்டாம். முழுவதுமாக பிளக்கை கழட்டிய பின்னரே கைகளால் தண்ணீரின் வெப்பத்தை சோதிக்க வேண்டும்.
- அதேபோல வாட்டர் ஹீட்டரை அணைத்து 10 நிமிடங்களுக்குப் பிறகு ஹீட்டர் ராடை தண்ணீரில் இருந்து அகற்றுவது நல்லது.
- இரும்பு வாளிகளில் வைத்து ஹீட்டரை பயன்படுத்த வேண்டாம். உலோகத்தில் மின்சாரம் பாயும். இதனால் ஷாக் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. இதற்கு பதிலாக தண்ணீரை சூடாக்க பிளாஸ்டிக் வாளிகளைப் பயன்படுத்துவது நல்லது.
- குறைந்த விலை என்பதற்காக கடைகளில் உள்ள மலிவான வாட்டர் ஹீட்டர்களை வாங்க வேண்டாம். இவை தரமானதாக இல்லாமல் இருக்கலாம். இதனால் ஷாக் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
- ஈரமான கைகளால் அல்லது ஈரமான ஆடைகளால் வாட்டர் ஹீட்டரைத் தொடாதீர்கள். அவ்வாறு செய்வதால் ஷாக் ஏற்படலாம்.
- வாட்டர் ஹீட்டரை தவறாமல் பழுது பார்ப்பது அவசியம். இவ்வாரு செய்வதன் மூலம் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் முன்கூட்டியே கண்டறிந்து அதனை தீர்க்க முடியும். நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள பழைய வாட்டர் ஹீட்டர்கள் மிகவும் ஆபத்தானவை. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இதனை மாற்றுவது பாதுகாப்பானது.
இதையும் படிங்க: மழைக் காலத்தில் இந்த உணவுகளை எல்லாம் சாப்பிடாதீங்க.. மருத்துவர்கள் கூறும் அட்வைஸ்!