சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக வட தமிழக மாவட்டங்கள் நிலைகுலைந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, பல கனவுகளோடு வாங்கிய கார்களும் நீரில் அடித்து செல்லப்பட்டன. சமீபத்தில் ஒரு வீடியோ வெளியானது. அதில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சில கார்கள் வண்டலூர் ரிங் ரோட்டின் ஓரம் நீரில் மூழ்கிய நிலையில் இருந்தன. இந்த வீடியோவை பார்த்தவர்கள் எல்லாரும் பல கனவுகளோடு பல இலட்சம் ரூபாய் செலுத்தி வாங்கிய கார்கள் இப்படி நீரில் அடித்து செல்லப்பட்டதே என்று தனது அனுதாபங்களை தெரிவித்தனர்.
இது மட்டுமில்லாமல் சாலை விபத்து, தீ விபத்து, நிலச்சரிவு போன்ற பல விபத்துகளில் சிக்கி கார் சேதமடைவதை பார்த்திருப்போம். முழுவதுமாக சேதமடைந்த இந்த கார்களை இனி பழைய சாமான் கடையில் தான் போட முடியும் என்றே விசயம் தெரியாத பலரும் கூறுகின்றனர்.
ஆனால் உங்களது கார் முழுவதுமாக சேதமாகி, அதாவது காரை பழுது கூட பார்க்க முடியாத நிலைமை இருந்தாலோ அல்லது உங்களது கார் திருடப்பட்டு போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ, நீங்கள் அந்த காரை எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினீர்களோ அந்த பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
அதற்கு நீங்கள் Add on ஆக RTI (Return to Invoice) வாகன காப்பீடு எடுத்திருக்க வேண்டும். இந்த காப்பீடு புதிய வாகனம் வாங்கும் போது தான் எடுக்க முடியும். புதிய வாகனம் வாங்கிய ஐந்து வருடங்களுக்கு மட்டுமே இந்த வாகன காப்பீடு செல்லுபடியாகும். ஐந்து வருடங்களும் தவறாமல் RTI வாகன காப்பீட்டை எடுத்திருக்க வேண்டும். சில கார் நிறுவனங்கள் மட்டுமே RTI காப்பீட்டு வசதியை மேலும் இரண்டு வருடங்களுக்கு வழங்குகின்றன.
இந்த RTI காப்பீட்டை எடுத்து இருந்தால் நீங்கள் கார் வாங்கும் போது செலுத்திய வண்டியின் இன்வாய்ஸ் மதிப்பு உங்களுக்கு க்ளைம் செய்யப்படும். வண்டியின் காப்பீடு மதிப்பு (IDV - Insurance Declared Value) எவ்வளவாக இருந்தாலும், வண்டியின் முழுமதிப்பு உங்களுக்கு வழங்கப்படும்.
இதுவரைக்கும் நீங்கள் உங்கள் காருக்கு RTI காப்பீடு எடுக்கவில்லை என்றால், இனிமேல் வாங்கும் புதிய காருக்காவது எடுத்துக்கொள்ளுங்கள். தக்க சமயத்தில் உதவும். ஏன் புதிய கார் என்று குறிப்பிடுகிறோம் என்றால் இந்த RTI காப்பீடு புதிதாக வாங்கும் காருக்கே செல்லுபடியாகும்.
இதையும் படிங்க: உங்க மொபைல் ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா?... எப்படி தெரிந்து கொள்வது!