தங்களின் முதல் மாதவிடாய் தொடங்கி உடலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பெண்கள் பல பிரச்சனைகளையும் அசவுகரியங்களையும் எதிர்கொள்கிறார்கள்.
சில பெண்கள் மெனோராஜியா எனப்படும் ஏழு நாள்களுக்கு மேல் நீடிக்கும் அதிகப்படியான இரத்தப்போக்கு பிரச்னை, குமட்டல், தலைவலி, வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகளையும் எதிர்கொள்கின்றனர். இது மாதவிடாய் பற்றிய தவறான புரிதல்களையும் பயத்தையும் ஏற்படுத்துகிறது. இத்தகைய காலக்கட்டத்தில் பெற்றோரின் பங்கு மிகவும் முக்கியமான ஒன்று.
பெற்றோர் மாதவிடாய் காலத்தில் தங்கள் குழந்தைகளின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி மட்டுமல்லாமல் சுகாதாரம், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றின் முக்கியத்துவம் குறித்தும் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
குறிப்பாக சரியான ஊட்டச்சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்வது மாதவிடாய் காலத்தை இலகுவாக்கும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா கல்சேகர்.
சத்தான, எளிதில் செரிமானமாகும் உணவு
"நேரம் தாழ்ந்து தூங்கி எழும் சிக்கலான வாழ்க்கை முறையை பலரும் கொண்டிருக்கும் இன்றைய காலக்கட்டத்தில், ஜங்க் ஃபுட் உள்ளிட்ட உணவுகளை தவிர்த்து சிறுமிகளுக்கு எளிதில் செரிமானமாகும் உணவை வழங்குமாறு அறிவுறுத்துகிறார் திவ்யா.
புரதங்கள், இரும்பு, கால்சியம் ஆகிய சத்துக்கள் நிறைந்ததாக உணவு இருக்க வேண்டும், கொழுப்பு, ஜங்க் உணவுகளை உண்ணுதல் கூடாது. மார்பகங்களில் மாற்றம், முகமாற்றம், பிறப்புறுப்புகளில் ரோம வளர்ச்சி என உடல்ரீதியான மாற்றங்களை இக்காலக்கட்டத்தில் பெண் பிள்ளைகள் அனுபவிப்பது மட்டுமல்லாமல், உளவியல் ரீதியான மாற்றங்களையும் அனுபவிக்கிறார்கள்.
சருமத்தில் எண்ணெய் அதிகம் சுரந்து பருக்கள் அதிகரிக்கும். இந்த மாற்றங்களை நாம் சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவு அளிப்பதன் மூலம் சமநிலைப்படுத்துதல் வேண்டும்.
சாப்பிட வேண்டிய உணவுகள்
காய்கறிகள், கீரை, வெந்தயம், பருப்பு, தானியங்கள் என பல நிறங்கள் கொண்ட உணவை சிறுமிகள் சாப்பிட ஊக்குவிக்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு முக்கியமாகத் தேவைப்படும் ஃபோலிக் அமிலத்தை இந்த உணவுகள் வழங்குகின்றன.
பொதுவாக, பெண்கள் மாதவிடாய் காலத்தில் இரும்புச்சத்து குறைபாட்டை எதிர்கொள்கின்றனர். இதனை ஈடுசெய்ய மாதுளை, கேரட், பீட்ரூட் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளலாம்.
மேலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தின் காரணமாக தான் வயதுவந்த சிறுமிகளும் பெண்களும் பல மாதவிடாய் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இல்லையெனில் மாதவிடாய் இரத்தப்போக்கு சாதாரணமாகவே இருக்கும். தசைப்பிடிப்பு, குமட்டல், வயிற்று வலி, தலைவலி போன்ற பிற தொடர்புடைய பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்ள மாட்டார்கள்" என்றும் கூறுகிறார் திவ்யா
சாப்பிடக் கூடாதவை
"ஜங்க் ஃபுட், கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இந்த உணவுகள் உடல் பருமனுக்கு எளிதாக இட்டு சென்றுவிடும். பருப்பு வகைகள் போன்ற வழக்கமான உணவுப் பொருள்களையும் மாதவிடாய் காலத்தில் உட்கொள்வது பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
சிறுமிகளுக்கு அவர்களது முதல் மாதவிடாயில் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவைக் கொடுக்க வேண்டும் என்றும், தொடர்ந்து மாதவிடாய் காலங்களில் அதே உணவு முறையை பராமரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்.
ராஜ்மா, குதிரைவாலி, கருப்பு உளுந்து, கடினமான தானியங்கள் ஆகியவையும் தவிர்க்கப்பட வேண்டும். மேலும், காரமான உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, சிப்ஸ், தேநீர், காபி ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். இந்த உணவுப் பொருள்கள் அஜீரணத்திற்கு வழிவகுப்பது முதல் தூக்கமின்மை பிரச்சனைகள் வரை தூண்ட வல்லவை" என்கிறார் திவ்யா.
இதையும் படிங்க: சரும அழகு, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மல்பெரி பழங்களின் பயன் அறிவோம்