இதுபோன்ற நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் பலரும் சத்தான உணவை உண்ண வேண்டும். ஆனால் வறுமை, பெண் ஒடுக்குமுறை, சிறுபான்மை போன்ற சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில் வாழும் மக்கள் ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பின்மையையே உணர்கிறார்கள்.
உலகெங்கிலும் தன் வேலையை காட்டிக் கொண்டிருக்கும் கரோனா தொற்று அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தாது. குறைவான ஊட்டச்சத்து உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் தொற்று ஏற்படும் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.
ஏற்றத்தாழ்வுகள்:
2020ஆம் ஆண்டுக்கான உலக ஊட்டச்சத்து அறிக்கையில், ஊட்டச்சத்தை அடைவதற்காக 2025ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதில் இந்தியா உள்பட 88 நாடுகள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. இந்தியாவிலேயே அதிக அளவிலான ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வு இருப்பதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக சுகாதார மாநாடு, 2025ஆம் ஆண்டில் அடையவேண்டிய ஆறு இலக்குகளை மையப்படுத்தியது. அது பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள், சிறுமியர்களுக்கு சத்தான உணவு வழங்கப்படுவதைக் குறிப்பிடுகிறது.
முக்கிய சவால்கள்:
ஊட்டச்சத்து என்று வரும்போது இந்தியா சில முக்கிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும். ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் இறப்பு, உடல் பலவீனம், இயலாமை போன்றவற்றை ஏற்படுத்துகிறது. ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளை இறப்பதில் இருந்து காப்பாற்ற ஊட்டச்சத்து குறித்தான கருத்தில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்தவேண்டும்.
ஒரு காலத்தில் உடல்பருமன், அதிக எடை மற்றும் ஒருவரிடத்திலிருந்து ஒருவருக்கு பரவாத நோய்கள் (non-communicable diseases) பெரியவர்களுக்குதான் இருக்கும். ஆனால் இப்போது குழந்தைகளையும் இந்நோய் சிறுவயதிலேயே பாதிக்கிறது. 19 வயதுக்குள்பட்ட 10 விழுக்காடு குழந்தைகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். வயதானவர்களுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அதிக நோய்கள் வருகின்றன.
எப்படி சரிசெய்ய முடியும்?
இதுதொடர்பான விழிப்புணர்வை அரசு மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, சந்தையில் கிடைக்கும் ஆரோக்கியமற்ற திண்பண்டங்களை தடை செய்ய வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு குறித்தான ஆய்வுகளில் குறிப்பிடப்பட்ட தகவல்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, அறிவியல் உலகுக்கு அவை கிடைக்க வேண்டும். சுகாதார ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்களிடமிருந்து உண்மைத் தகவல்களைப் பெற வேண்டும். எதிர்காலத்தில் கரோனா தொற்று போன்ற நோய்களுக்கு எதிராக போராட நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சத்தான உணவு வழங்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க: நீண்ட ஆரோக்கியத்திற்கான வழிவகுக்கும் பழங்கள்!