சென்னை: உலக அளவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுவதுடன், இந்த மாதம் முழுவதும் இது தொடர்பான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முன்னெடுப்புகள் நடைபெறுகின்றன. இந்நிலையில்தான் அக்டோபர் 13ஆம் தேதி 'No Bra Day' தினம் அனுசரிக்கப்படுகிறது.
'No Bra Day' தினம் எதற்காக? பெண்களின் மார்புகள் ஒரு குழந்தை உயிர் வாழ்வதற்கான ஆதாரமாக இருக்கிறது. மிகவும் புனிதமாகப் பார்க்கப்படும் மார்புகள் பெண்களின் தன்னம்பிக்கையையும் உறுதி செய்கின்றன. இந்நிலையில், மார்பக புற்று நோயால் பாதிக்கப்படும் பெண்களில் சிலருக்கு மார்பகங்களை அகற்றும் நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்கள், உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுவதுடன் Bra அணிய முடியாத காரணத்தால் தன்னம்பிக்கையையும் இழக்கின்றனர். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், மார்பகங்கள் இல்லை என்றாலும் நீங்கள் அழகுதான் என அவர்களைப் போற்றும் வகையிலும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
மார்பக புற்று நோய்; உலக அளவில் பல லட்சம் பெண்கள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படும் நிலையில் இந்தியாவில் மட்டும் வருடத்திற்கு சுமார், மொத்த பெண்கள் தொகையில் 14 சதவீதம் பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த மார்பக புற்று நோய் குறித்து ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியப்பட்டுவிட்டால் உயிருக்கு ஆபத்து இன்றி அவர்களைக் காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இல்லை என்றால் புற்று நோய்க் கிருமிகளின் தாக்கம் உடலின் பிற பாகங்களையும் சென்றடைந்து உயிருக்கு ஆபத்தான நிலைக்குக் கொண்டு சென்றுவிடும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மார்பக புற்றுநோய் அறிகுறிகள்;
- மார்பகத்தில் கட்டி அது வலியுடனும் இருக்கலாம் வலி இல்லாமலும் இருக்கலாம்
- மார்பக காம்பில் இருந்து ரத்தம் அல்லது நீர் கசிதல்
- மார்பகத்தின் நிறம் மற்றும் தோற்றத்தில் வித்தியாசம்
- அக்குள்களில் வலி
- மார்பக காம்பு உள்ளே இழுக்கப்படுதல்
உள்ளிட்டவை மார்பக புற்று நோயின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக உள்ளன. இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகிச் சிகிச்சைபெற வேண்டும்.
யார், யாருக்கு மார்பக புற்று நோய் வரும்; 45 வயதிற்கு மேற்பட்ட பெண்களை மட்டும் அதிக அளவில் பாதித்துக்கொண்டு இருந்த இந்த மார்பக புற்றுநோய் இன்று 30 வயதிற்கும் குறைவான பெண்களையும் பாதிக்கத்தொடங்கி விட்டது. உடல் பருமன், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கம், வாழ்வியல் மாற்றம், 30 வயதிற்குப் பிறகு கருத்தரித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்கள் மார்பக புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.
சிகிச்சை முறை என்னென்ன? மார்பகங்களைத் தொட்டுப்பார்த்தாலே கட்டி உள்ளிட்ட ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா? என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அப்படி இருந்தாலும், இல்லாவிட்டாலும் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மாதம் ஒருமுறையாவது மார்பக புற்று நோய் பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது. எஸ்க் ரே மற்றும் எம்ஆர்ஐ பரிசோதனைகள் மூலம் மார்பக புற்று நோய் எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் அதனை அடிப்படையாகக்கொண்டு சிகிச்சை முறைகள் மாறுபடும்.
'No Bra Day' தினத்தை எவ்வாறு அனுசரிக்கலாம்;
- இன்றைய ஒரு நாள் Bra அணியாமல் அந்த உணர்வை சக பெண்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். புற்று நோயால் மார்பகம் அகற்றப்பட்ட பெண்களின் உணர்வுகளை மதியுங்கள்.
- மார்பகங்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்துங்கள். இது குறித்து உங்கள் நண்பர்கள் மற்றும் பிற பெண்களிடம் தெரியப்படுத்துங்கள்.
- மார்பக புற்றுநோய் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்குங்கள், பிறரையும் அதற்காக ஊக்குவியுங்கள்.
- சமூக வலைத்தளங்கள் வாயிலாக மார்பக புற்று நோய் குறித்தும் 'No Bra Day' குறித்தும் தகவல்களைப் பகிருங்கள்.
இதையும் படிங்க: தீபாவளி பலகாரங்களால் ஆபத்து? உஷாரா இல்லைன்னா உடம்பு கெட்டுப்போயிடும்!