ஹைதராபாத் : ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதியை தேசிய மருத்துவர் தினமாக நாம் கொண்டாடிவருகிறோம். கரோனா பெருந்தொற்று கொடுத்த நெருக்கடி காரணமாக இந்தாண்டு மருத்துவர்களுக்கு வாழ்த்து வெறும் வாய்மொழி சம்பிரதாயமாக அமையவில்லை.
மாறாக பலரும் நெஞ்சார்ந்த நன்றியை உளமார தெரிவிப்பதை பார்க்கிறோம். நம்மில் பலருக்கும் ஜூலை 1ஆம் தேதி மருத்துவர் தினமாக கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் குறித்து தெரியவாய்ப்பில்லை.
மருத்துவர் பி.சி. ராய்
இந்தத் தினத்தில்தான் (1882 ஜூலை 1) சுதந்திர போராட்ட வீரர், மேற்கு வங்க முதலமைச்சர், அண்ணல் காந்தியடிகளின் மருத்துவர் என பல்வேறு சிறப்புக்குரிய மருத்துவர் பி.சி. ராய் பிறந்தார்.
பிதான் சந்திர ராய் என இயற்பெயர் கொண்ட பி.சி. ராய் மக்களின் பெரும் அன்பிற்கு சொந்தக்காரர். பிகார் தலைநகர் பாட்னாவின் பங்கிபோரா என்ற இடத்தில் பிறந்த இவர், 1948ஆம் ஆண்டு முதல் தன் இறப்பு வரை (1962 ஜூலை 1) மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தார்.
அண்ணல் காந்தியின் மருத்துவர்
இவரின் தந்தை பிரகாஷ் சந்திர ராய் கலால் வரி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தாயாரும் சமூக செயற்பாட்டாளராக திகழ்ந்தார். இதனால் சிறு வயதிலேயே பி.சி. ராய்க்கு சுதந்திர போராட்டம் மீது தீராக தாகம் ஏற்பட்டது.
தனது இளமை வயதிலே சுதந்திர போராட்ட வீரராக திகழ்ந்தார். அண்ணல் காந்தியடிகளின் மருத்துவராக பணிபுரிந்துள்ளார். மருத்துவத் துறையிலும் இவரின் பங்கு அளப்பரியது.
பங்களிப்பு
இந்திய மருத்துவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த பி.சி. ராய், ஜாதவ்பூர் காசநோய் மருத்துவமனை, சித்தரஞ்சன் சேவா சதன், விக்டோரியா நிறுவனம் (கல்லூரி), சித்தரஞ்சன் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் சித்தரஞ்சன் சேவா சதான் போன்ற மருத்துவ நிறுவனங்களை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக நிறுவுவதில் பெரும் பங்கு வகித்தார்.
இவரின் பணியை பாராட்டிய ஆங்கில நாளேடு, “ஆசிய கண்டத்திலே இவரை போன்ற சிறந்த மருத்துவர்களை காண்பது அரிது. பி.சி. ராய் தனது சமகாலத்தவர்களை விடவும் வெற்றிகரமாகவும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டார்” எனத் தெரிவித்துள்ளது.
பாரத ரத்னா
மருத்துவர் பி.சி. ராயின் சிறந்த பங்களிப்பை போற்றும் வகையில், நாட்டின் மிக உயரிய குடிமக்கள் விருதான பாரத ரத்னா அவருக்கு 1961ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வழங்கப்பட்டது.
இதையும் படிங்க : கோவிட் இரண்டாம் அலையில் 798 மருத்துவர்கள் உயிரிழப்பு!