சென்னை: ஒரு மனிதனுக்கு ‘பாலியல் உறவு’ என்பது அத்தியாவசிய வாழ்வியல் நடைமுறையாக பின்பற்றப்படுகிறது. பொதுவாகவே இருபாலின பிறப்புறுப்புகள் சேர்வதும், அதில் கிடைக்கும் இன்பமும் மட்டுமே பாலியல் உறவுக்கு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், அதையும் தாண்டி இருபாலின மனங்களும் ஒரே எண்ண அலைகளால் சேர வேண்டும் என்பதும் நிதர்சனமான உண்மையாக உலக அளவில் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்தியா போன்ற பல்வேறு சமூக மற்றும் பண்பாட்டு கட்டமைப்புகளைக் கொண்ட நாடுகளில் பிறப்புறுப்பு, மனம் ஆகியவற்றைத் தாண்டி ஆசைகளை அடக்கி வைத்தல், விருப்பமின்மை ஆகியவையும் சமூக கட்டமைப்புகளால் செயற்கையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு பாலினத்தவர் தனக்கு எதிரான பாலினத்தவரை பாலியல் வன்புணர்வு செய்தால் அது குற்றமாக கருதப்படுகிறது.
அதேநேரம், ஒருவர் தனக்கு எதிரான பாலினத்தவரை திருமணம் செய்துகொண்டு, திருமணம் முடிந்த முதல் நாளிலே அவரது அந்தரங்க ரகசியங்களை அறிய அனுமதியின்றி அல்லது விருப்பமின்றி முற்படுவது குற்றமாக கருதப்படுவதில்லை. இதில் பெரும்பாலும் பெண்கள் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு ஆபாச வீடியோக்களும் ஒரு காரணியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
ஏனென்றால், ஆபாச வீடியோக்களில் பல்வேறு வகையான பாலியல் உறவு முறைகள் காண்பிக்கப்படுகிறது. எனவே இவை அனைத்தையும் தன்னுடைய மனைவியிடம் ஒருவர் எதிர்பார்க்கிறார். இதுவே பல்வேறு விதமான பாலியல் நோய்களுக்கு வித்திடுகிறது. அதிலும், தற்போது உள்ள பெரும்பாலான ஆண்கள் வாய்வழி உறவை மேற்கொள்ள ஆர்வம் கொள்கின்றனர். ஆனால், இது 10இல் 9 பெண்களுக்கு முக சுழிப்பையும் அருவருப்பையும் உண்டாக்குகிறது.
இதனால் 3இல் 2 பெண்கள் சுயவிருப்பமின்மையால் தனது கணவருடன் உடலுறவு வைத்துக் கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே பாலியல் உறவு என்பது மென்மையான ஒன்று எனவும், பாலியல் உறவின் ஆரோக்கியத்தையும், இனப்பெருக்க வழநோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12ஆம் தேதி பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கிய விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதன் மூலம் ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலினத்தவர்களுக்கான பாலியல் உறவின் தன்மை, பாலியல் உறவில் தனிமனித சுதந்திரம், பாலியல் உறவின்போது மேற்கொள்ளக்கூடாதவை மற்றும் இனப்பெருக்க நோய்கள் ஆகியவற்றை குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்படுகிறது. ஏனென்றால், ஆபத்தான பாலியல் உறவுகள், விருப்பமில்லா பாலியல் உறவுகள் ஆகியவற்றால் கருக்கலைப்பு, பிரசவமின்மை மற்றும் மாதவிடாய் பிரச்னை ஆகியவை உண்டாகின்றன.
அதிலும் இந்தியாவில் வருடத்துக்கு 15.6 மில்லியன் மக்கள் கருக்கலைப்பு செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தியாவில் 6 சதவீதம் பேர் பாலியல் உறவினால் வரக்கூடிய நோய்கள் மற்றும் இனப்பெருக்க வழியினால் வரக்கூடிய நோய்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக எச்ஐவி தொற்று, இனப்பெருக்க புற்றுநோய், கோனோர்கியா, ஷலாமிய்தியா, சிபிலிஸ், டிரைகோமோநியாசிஸ், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னை, பாலியல் உறவின்போது சுயவிருப்பத்தை இழத்தல், பாலியல் உறவினை அறியாமை, பாலியல் உறவில் போதிய திருப்தியின்மை, முறைகளற்ற பாலியல் உறவு, கட்டாய பாலியல் உறவு, ஆண்களுக்கு விந்தணு பிரச்னை மற்றும் பெண்களுக்கு கருமுட்டை தொடர்பான பிரச்னை ஆகியவற்றால் பெரும்பாலும் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி 186 மில்லியன் மக்கள் கருத்தரிப்பின்மையால் பாதிக்கப்படுகின்றனர். எனவே பாலியல் உறவு அல்லது உடலுறவு என்பது இரு பாலினத்தவரின் உடல் மற்றும் மன ரீதியான சுயவிருப்பத்தைச் சேர்ந்துள்ளதாகவும், இதில் பெரும்பாலும் பெண்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிகிறது. அதேநேரம் இது கிராமப்புறங்கள் முதல் நகர்புறம் வரை அனைவரது மத்தியிலும் மறைவாக இருக்கிறது.
மேலும் பாலியல் உறவின் ஆரோக்கியம், பாலியல் உறவின்போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், பாலியல் உறவுக்கு ஏற்ற மனப்பக்குவத்தை அறிதல் மற்றும் பாலியல் உறவினால் வரக்கூடிய நோய்கள் ஆகியவை குறித்து அறிய 11800-11-6555 என்ற எண்ணுக்கு காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்பு கொள்ள தேசிய மக்கள்தொகை உறுதிப்படுத்துதல் நிதி சேவை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: முதுமையை தள்ளிப்போடும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இறைச்சியில் உள்ளதா?