சென்னை: ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். புதிதாக ஒருவரை காணும்போது, அவரின் ஆடையை வைத்தே அவரை மதிப்பிடுவோம். அதனால்தான் ‘கந்தையானாலும் கசக்கி கட்டு’ என்பார்கள். நாள்தோறும் நாம் உடுத்திச் செல்லும் துணிகளில் அழுக்குகள், கறைகள் ஏற்படுவதோடு மட்டுமின்றி, கிருமிகளும், பாக்டீயாக்களும், துர்நாற்றமும் தோன்றுகின்றன.
எதற்காக ஃபேப்ரிக் கண்டிஷ்னர்? துணிகளை துவைக்கும்போது அழுக்குகள் மற்றும் கறைகளை நீக்க மெனக்கெடுவதைப்போல, பாக்டீரியாக்களை ஒழித்து, நல்ல மணமாக வைத்துக் கொள்ள வேண்டும். நம்மில் பலர் இதற்காக ஃபேப்ரிக் கண்டிஷ்னர்களை (Fabric Conditioner) உபயோகப்படுத்துகிறோம். சந்தைகளில் விற்கப்படும் ரசாயனம் கலந்த ஃபேப்ரிக் கண்டிஷ்னர்களை உபயோகப்படுத்தும்போது சிலருக்கு தோலில் எரிச்சல், தோல் அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன.
ரசாயனம் கலந்த ஃபேப்ரிக் கண்டிஷ்னரால் ஏற்படும் தீமைகள்: சந்தைகளில் விற்கப்படும் ஃபேப்ரிக் கண்டிஷ்னர்களின் பயன்பாட்டிற்கு பதிலாக, இயற்கை வாசனை திரவியங்களைப் பயன்படுத்தலாம். ரசாயனம் கலந்த ஃபேப்ரிக் கண்டிஷ்னர்கள் மற்றும் வாசனைத் திரவியங்களை பயன்படுத்தும்போது, அதில் உள்ள ரசாயனங்கள், சருமம் அல்லது தோல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இது மட்டுமில்லாமல் சுவாச பிரச்னைகளையும் ஏற்படுத்தும்.
இயற்கையான ஃபேப்ரிக் கண்டிஷ்னர் செய்வது எப்படி? அதனால் சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்கள், அதாவது ஆஸ்துமா, சைனஸ் உள்ளிட்ட பிரச்னை இருப்பவர்கள் வாசனைத் திரவியங்களை உபயோகப்படுத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுவர். இயற்கையான வாசனைத் திரவியங்களை உபயோகப்படுத்தும்போது, மனதிற்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு, மன அழுத்தத்தையும் போக்குகிறது. இதை வீட்டிலேயே செய்யலாம்.
ஆர்கானிக் கடைகளில் கிடைக்கும் லாவண்டர் எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய், எலுமிச்சை, பெப்பர் மின்ட் (Pepper Mint) ஆகியவற்றில் உங்களுக்கு விருப்பமான எண்ணெய்யை எடுத்துக் கொள்ளுங்கள். அரை கப் வெள்ளை வினிகரில், 10 சொட்டு எண்ணெய்யை விட்டு கலக்கவும். இதை அப்படியே கொதிக்கும் நீரில் சேர்க்க வேண்டும்.
அதன் பிறகு ஆடைகளை அலசினால், துணிகள் இயற்கையான நறுமணத்துடன் இருக்கும். மேலும், ஆடைகளில் உள்ள பாக்டீரியாக்களும், கிருமிகளும் அழிந்திருக்கும். நீங்கள் உபயோகப்படுத்தக்கூடிய எண்ணெய்கள் உங்களுக்கு பொருத்தமானதுதானா என்றும், தோலில் அரிப்பை ஏதும் ஏற்படுத்துகிறதா என்பதையும் முதலில் கவனிக்க வேண்டும்.
முதலில் நீங்கள் தேர்ந்தெடுத்த எண்ணெய்யை தோலில் தடவிப் பார்க்க வேண்டும். அன்றைய நாளில் உங்களுக்கு தோலில் அரிப்பு, எரிச்சல் போன்ற உணர்வு போன்றவை இல்லாமல் இருந்தால், தாராளமாக நீங்கள் இந்த ஃபேப்ரிக் கண்டிஷ்னர்களை பயன்படுத்தலாம். இந்த ஃபேப்ரிக் கண்டிஷ்னரிலேயே நல்ல வாசனை இருப்பதால், நீங்கள் கூடுதலாக வாசனைத் திரவியம் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
இதையும் படிங்க: ஃபேஸ் வாஷ் இனி வீட்டிலேயே ரெடி பண்ணுங்க.. விலையோ குறைவு.! தரமோ நிறைவு.!