சென்னை: கொளுத்தும் கோடை காலங்களுக்கு பிறகு வரும் மழை அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்தாலும் வெயில் காலத்தை விட மழைக்காலத்தை சமாளிப்பது தான் கடினம். காய்ச்சல், சளி, சருமம் வறட்சி போன்ற உடல் தொந்தரவுகள் அதிகம் ஏற்பட்டு உடலை சோர்வாக்கும். அப்படி இந்த மழைக் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும் முன்னெச்சரிக்கைகளை பற்றிய தொகுப்பை இதில் காணலாம்.
தண்ணீர் பயன்பாட்டில் கவனம்: மழை காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயிற்று வலியால் பாதிக்கப்படுவது பொதுவானது. அதற்கு முக்கிய காரணம் நாம் அருந்தும் தண்ணீர். வெயில் காலங்களை விட மழை காலங்களில் தண்ணீர் அருந்துவதில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். காரணம் மழைக்காலங்களில் தண்ணீரில் கண்ணுக்கு தெரியாமல் பாக்டீரியாக்கள் இருப்பது தான்.
தண்ணீரை எப்போதும் வடிகட்டி குடிக்க வேண்டும். அதிலும் மிக சிறந்தது தண்ணீரை கொதிக்க வைத்து வெது வெதுப்பான சூட்டில் பருகுவது. பயணங்கள் மேற்கொள்ளும் போது வீட்டிலிருந்தே தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்லவும். அப்படி முடியாத பட்சத்தில் குழாய்களில் வரும் தண்ணீரை நேரடியாக பருகாமல் கடைகளில் விற்கும் சீல் செய்யப்பட்ட பாட்டில்களை பயன்படுத்த வேண்டும்.
தவிர்க்க வேண்டிய காய்கறிகள்: மழை காலங்களில் உணவில் தனி கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. குறிப்பாக சில காய்கறிகள் நமது செரிமான அமைப்பில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அந்த வகையில் குளிருக்கு இதமாக இருக்கும் என சாப்பிட தோனும் காலிஃபிளவர் பக்கோடா ஆரோக்கியதிற்கு நல்லதல்ல.
அதை போல, இரும்பு சத்துள்ள காய்கறிகளை அதிகம் தவிர்க்க வேண்டும். அந்த வகையில் கீரை வகைகள் வயிற்று தொற்று அபாயத்தை அதிகரிக்கும். அதை போல முட்டை கோஸ், குடை மிளகாய், தக்காளி போன்ற காய்கறிகளின் அளவை குறைக்க வேண்டும்.
'நோ' டூ ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்: ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், பானி பூரி, போன்ற உணவுகள் காரசாரமாக இருப்பதால் மழைக்காலங்களில் அதிகம் சாப்பிட தூண்டும். ஆனால் அந்த உணவுகளை செய்ய பயன்படுத்தப்படும் தண்ணீர் சுத்தமாக இருக்கும் என உறுதியாக சொல்ல முடியாததால், ஸ்ட்ரீட் ஃபுட் உணவுகளை தவிர்க்க வேண்டும். வெளி உணவுகளை சாப்பிடுவதால் டைபாய்டு முதல் காலரா வரை பல்வேறு நோய்த்தொற்றுகளைப் பரவும் அபாயம் ஏற்படுகிறது.
மழையில் நனைய வேண்டாம்: மழையை பார்த்ததும் அதில் நனைந்து ஆட்டம் போட வேண்டும் என அனைவரும் ஆசைப்படுவதுண்டு. ஆனால் அந்த மழை தண்ணீரில் உள்ள மாசுகள் தோலில் படுவதனால் காய்ச்சல் போன்ற உபாதைகளை ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. இருப்பினும், மழையில் நனைவதற்கு ஆசைபடுபவர்கள் சிறுது நேரம் மட்டும் மழையில் விளையாடி விட்டு இறுதியாக மிதமான தண்ணீரில் குளிக்க வேண்டும்.
பழங்கள் சாப்பிடவும்: மழைகாலங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பழங்கள் சிறந்த மருந்தாக செயல் படுகிறது. ஆப்பிள், சிட்ரஸ் அதிகமுள்ள ஆரஞ்சு, மொசாம்பி போன்ற பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
கொசு தொல்லை: மழை காலங்களில் கொசு அதிகம் இருப்பதால் மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல்கள் பரவுகின்றன. இதனை தடுக்கும் விதமாக வீட்டை சுற்றி தேங்கும் தண்ணீர்களை அப்புரபடுத்த வேண்டும். மேலும், மாலை நேரங்களில் வெளியே செல்லும் போது முழு கை சட்டைகளை பயன்படுத்த வேண்டும்.
யோசிக்காமல் மருத்துவரை அணுகவும்: கால நிலை மாற்றத்தால் அனைவருக்கும் உடலில் மாற்றங்கள் ஏற்படலாம். சளி, காய்ச்சல், கால் வலி, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் எழலாம். இதெல்லாம் சாதரணமாக வரக்கூடிய பிரச்சனைகள் என மெத்தனமாக இருந்து விட கூடாது. மருத்துவர்களை அனுகி முறையான சிகிச்சைகள் பெருவது மூலமே உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும்.
இதையும் படிங்க: கழுத்து வலிக்கும் - தலைவலிக்கும் தொடர்புண்டா?... - ஆய்வு என்ன கூறுகிறது!