சென்னை: பொதுவாக குளிர்காலம் என்றதும் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய்கள் வரும் என்பதும், ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்பதும் நாம் அறிந்ததே. ஆனால், இந்த குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்பதும், கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் வரும் என்று தெரியுமா?
குளிர்கால இதய ஆரோக்கியம்: ஆம். சமீபத்திய ஆய்வுகளில், குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படும் விகிதம் அதிகரித்துள்ளதாக இருதய நோய் நிபுணர் கூறியுள்ளார். குளிர்காலத்தில் ஏற்படும் அதீத குளிரின் காரணமாக உடலின் ரத்த நாளங்கள் சுருங்கி, ரத்த கட்டுகள் (Blood Clots) உருவாகும். இதன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயம் அதிகமுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமான உடற்பயிற்சி, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகள், மிதமான சூட்டில் உணவுகள் உண்ணும் பழக்கம் போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து இருதய நோய் நிபுணர் விஜய் குமார் கூறுகையில், 'குளிர்காலத்தில் ஏற்படும் மாரடைப்பின் அபாயத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பது இன்றியமையதாதது. குளிர்கால மாரடைப்பு சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படுகிறது.
மேலும், இக்காரணிகளுக்கு ஆஸ்துமா மற்றும் புகைப்பிடிப்பவர்களின் சுவாச நிலைகளை தீவிரமடைய செய்கிறது. சரிவடைந்த வெப்பநிலை இதய செயல்பாடுகளில் சுமையை ஏற்படுத்துகிறது' என்று கூறினார். கான்பூரின் ரீஜென்சி மருத்துவமனையின் இருதய நோய் நிபுணர் அபினித் குப்தா கூறுகையில், 'குளிர்காலத்தில் ரத்த நாளங்கள் சுருங்குவது, உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு அதிக அளவிலான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
மேலும், மூளை பலவீனமடைவதற்கான வாய்ப்பை அதிகரிப்பதுடன் இது பக்கவாதம் போன்ற அபாயத்தையும் அதிகரிக்கிறது. கோடைக்காலத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறப்பவர்களின் விகிதத்தைக் காட்டிலும், குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறப்பவர்களின் விகிதம் அதிகமாக உள்ளது. சரியான அளவில் நீரேற்றத்துடன் இருப்பதன் மூலம் குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். எல்லாரும் இருதய ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து, பருவகால சவால்களை சமாளிக்க தங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்' என்றார்.
குளிர்கால கண் பாதுகாப்பு: குளிர்காலங்களில் கண் பாதுகாப்பையும் மேம்படுத்த வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். உலகளாவிய லாப நோக்கமற்ற அமைப்பான ஆர்பிஎஸ் இண்டர்நேஷனலின் இயக்குநர் மருத்துவர் ரிஷி ராஜ் போரா இது குறித்து கூறுகையில், 'குளிர்காலத்தில் நிலவும் வறண்ட காற்று, உட்புற வெப்பம் மற்றும் கடுமையான காற்றின் வெளிப்பாடு போன்றவை கண்களில் வறட்சி, எரிச்சல் போன்றவற்றை உண்டாக்கும். ஆகவே, குளிர்காலங்களில் கண் பராமரிப்பை மேம்படுத்த வேண்டும்.
நீரேற்றத்துடன் இருப்பது, கண்களில் ஏதேனும் பாதிப்புகள் இருப்பின் மருத்துவரின் ஆலோசனைப்படி கண் சொட்டு மருந்து பயன்படுத்துதல், போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் கண்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க முடியும்' என்று அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: நேரம் தவறிய உணவு முறை; இதய நோய்க்கு வழிவகுக்குமா? ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!