சென்னை: பெண்கள் முகத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பல மெனக்கெடுவர். சருமத்தில் படியும் எண்ணெய்யை அகற்ற பல சோப்புகளையும்; முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்க பலவித க்ரீம்களையும் பயன்படுத்துவர். இது மட்டுமில்லாமல், முகத்தை பளபளப்பாக்க வேண்டும் என்று அதிக செலவு செய்து பியூட்டி பார்லர்களுக்கும் செல்கின்றனர். இனிமேல் அவ்வாறு செய்ய தேவையில்லை.
எல்லாவித சரும பிரச்னைகளுக்கும் தீர்வுகாணும் வகையில், பழங்களை வைத்து வீட்டிலேயே ஃபேஸ் பேக் (Face back) போடலாம். பழங்களில் ஃபேஸ் பேக் என்றதும் விலையுயர்ந்த வெளிநாட்டு ஸ்ட்ராபெர்ரி, கிவி, ப்ளூபெர்ரி, அவகேடோ, டிராகன் பழம், பீச் பழம் என்று எண்ணி விட வேண்டாம். நமது ஊர்களில் சாதாரணமாக கிடைக்கும் பழங்களைக் கொண்டே பேசியல் (Facial) செய்யலாம். முகப்பரு, கரும்புள்ளி, வறண்ட சருமம், எண்ணெய் பசை சருமம், கருமை போன்ற எல்லா பிரச்னைகளையும் சரிசெய்யும் பழ ஃபேஸ் பேக்குகளை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
ஆப்பிள் பழ ஃபேஸ் பேக்: ஒரு ஆப்பிளை தோல் நீக்கி, துண்டு துண்டாக நறுக்கி, அதை நன்றாக மசித்து விட வேண்டும். அதில், சிறிதளவு தேன் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, அரை மணிநேரம் கழித்து கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை தொடர்ந்து முகத்தில் போட்டு வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து, சருமம் நல்ல பொலிவு பெறும்.
ஆரஞ்சு தோல் ஃபேஸ் பேக்: இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க நீங்கள் சாப்பிடும் ஆரஞ்சு பழத்தின் தோல்களை சேமித்து, நன்றாக உலர வைக்க வேண்டும். அதன்பின், அவற்றை பொடி போல் அரைத்துக் கொள்ளவும். அந்த பொடி ஒரு ஸ்பூன், சந்தனப் பொடி ஒரு ஸ்பூன், ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போட்டு வந்தால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீக்கி சருமம் இளமையாக மாறும்.
பப்பாளி ஃபேஸ் பேக்: சரும பாதுகாப்பு உள்ள தேர்வுகளில் பப்பாளியும் ஒன்று. பப்பாளி பழத்தின் சாறுடன் சிறிதளவு காய்ச்சாத பால் மற்றும் தேனுடன் கலந்து பேஸ்ட் போல் கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். இதனைத் தொடர்ச்சியாக செய்து வந்தால், சருமத்தில் உள்ள முகப்பருக்கள், தழுப்புகள் மறைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.
தர்பூசணி ஃபேஸ் பேக்: கோடைக்காலங்களில் மட்டும் கிடைக்கும் தர்பூசணி, தற்போது எல்லா காலங்களிலும் கிடைக்கிறது. இந்த தர்பூசணி பழத்தின் சாறை முகத்தில் தடவி, இருபது நிமிடங்கள் கழித்து கழுவவும். இதை செய்து வந்தால், குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சி சரியாகிவிடும். தர்பூசணி சாறு முகத்திற்கு டோனராக செயல்படும்.
பல்வகை பழங்களில் ஃபேஸ் பேக்: வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளி, ஆரஞ்சு பழம் போன்றவற்றை சம அளவில் எடுத்து, பேஸ்ட் போல் அரைத்து, முகத்தில் அப்ளை செய்யவும். அரைமணி நேரத்திற்குப் பிறகு, முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் கருமை நீங்கி சருமம் பிரகாசமாகும். இந்த பழ ஃபேஸ் பேக் பியூட்டி பார்லர்களில் செய்யும் பேசியல் போல் இருக்கும்.
இதையும் படிங்க: பட்டு போல் மிருதுவான கூந்தல் வேண்டுமா?... இதை மட்டும் செய்தால் போதும்!