இந்தத் தொற்று காலம் நம்மில் பலரது வாழ்க்கையையும் வாழ்க்கை முறையையும் மாற்றியிருக்கிறது. நம்மில் சிலருக்கு இந்த ஊரடங்கு நல்லவற்றை செய்திருக்கிறது. எனினும் வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் இளைஞர்கள், ஆன்லைன் வகுப்புகளால் வாடிப் போயிருக்கும் குழந்தைகள், மாணவர்கள், வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள் ஆகியோரை இந்த ஊரடங்கு காலம் கொஞ்சம் மன அழுத்தத்தில் தள்ளியிருக்கிறது என்று அறுதியிட்டு சொல்லலாம்.
மேலும், இது போன்ற சமயங்களில் மன அழுத்தம் என்பது அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாத ஒன்று. மன அழுத்தம் ஏற்படும் பெரும்பாலானவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயங்களும் அதிகம். காரணம் மன அழுத்தம், உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். எனவே உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் மனதில் வைத்து ஆரோக்கியமான உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க... அற்புதமான ஆற்றல் அளிக்கும் 9 உணவுகள்!
அண்மைக் காலமாக மக்கள் துரித உணவுகளை உட்கொள்வதை சற்று ஓரம் கட்டிவிட்டு, உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் குறித்து இணையத்தில் தேடி ஆராய்ந்து உண்டு, தங்கள் உணவு முறையை மேம்படுத்தி வருகின்றனர். இதற்கு கரோனா நோய்த் தொற்றும் ஒரு காரணம். உணவிலுள்ள ஊட்டச்சத்துகள் குறித்து ஆராய்ந்து உணவுகளை எடுத்துக் கொண்டாலும், ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்வதின் அடிப்படையை நாம் தெரிந்துகொண்டு, அதன் பிறகு அவற்றை உட்கொள்ளலாம். உணவு உட்கொள்வதில் சில பழக்க வழக்கங்களை மாற்றியமைத்தால் போதும், மன அழுத்தம் இல்லாமல் இந்த ஊரடங்கை நிம்மதியாகக் கடக்கலாம்.
வீட்டில் தயாரிக்கும் உணவிற்கே முன்னுரிமை கொடுங்கள்:
தொற்று காலத்திற்கு முன்பு வெளியில் உணவு உட்கொண்டிருந்த நம்மில் பலருக்கு வீட்டு உணவு குறித்தான புரிதல் அதிகரித்திருக்கும். உடல் ஆரோக்கியத்தை நாம் எந்த அளவிற்கு முன்பு அசட்டை செய்திருப்போம் என்றும் உணர்ந்திருப்போம்.
இந்த நேரத்தில், சரியான உணவைத் தேர்வு செய்து உண்பதற்கு நாம் கற்றுக் கொண்டிருப்போம். அதில் முக்கியமாக நாம் கருத்தில் கொள்ள வேண்டியது, வீட்டில் தயாரித்த உணவிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதே. பிரிசர்வேட்டிவ் இல்லாத, சுவை கூட்டும் உப்புகள் இல்லாத உணவுகள், வீட்டில்தான் கிடைக்கும். அதற்கு நிகரான பாதுகாப்பான உணவு வேறு எங்கும் கிடைக்காது. வீட்டில் பிரெஷ்ஷாக வாங்கி வந்த எண்ணெயைப் பயன்படுத்துங்கள். சூடான உணவை சாப்பிடவே முன்னுரிமை கொடுங்கள்.
என்ன உணவினை எடுத்துக் கொள்கிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!
உணவே மருந்து என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டாலே உடலும், மனமும் திடமாய் இருக்கும். தற்போது துரித உணவுகளை பெருமளவில் மக்கள் புறக்கணித்து வருகிறார்கள். ஒரு வகையில் பார்த்தால் இது ஆரோக்கியமான மாற்றமே.
சத்தான உணவை உண்டாலும், உடலில் நோய்களை எதிர்க்கும் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் வைட்டமின் சி, இ நிறைந்த காய்கறிகள், பழங்களை உண்ணுங்கள்.
இதையும் படிங்க... கரோனாவை எதிர்க்கும் உணவுகள் இவைதானாம்!- பரிந்துரைக்கப்படும் உணவுகள்
சரிவிகித உணவு:
சரிவிகித உணவு அதாவது ’balanced diet’ என்று சிறு வயதில் பாடம் படித்திருப்போம். அதை தற்போது நாம் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தப் பழக வேண்டும். (வாழ்க்கை முறை மாற்றமும் மன அழுத்தத்தில் இருந்து நம்மைக் காக்கும் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்).
உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதச் சத்து, இரும்புச் சத்து, கொழுப்புச் சத்து, நீர்ச்சத்து என அனைத்தும் நம்மை நோயற்ற வாழ்க்கைக்கு இட்டுச் செல்லும். போதுமான வைட்டமின் சத்துகள், தாதுக்கள் ஆகியவை, நம்மை தொற்றிலிருந்து மட்டுமல்ல பிற நோய்களிலிருந்தும் பாதுகாக்கும். யோசித்து பாருங்கள், தொற்று இல்லாத காலத்தில் நமக்கான உணவை தேர்ந்தெடுக்கக்கூட நமக்கு நேரம் இல்லாமல் இருந்தது. அப்போது நம் உடலைப் பேணி காக்கும் வாய்ப்பும் நமக்கு இல்லாமல் இருந்தது.
இன்றைய சூழலில் சம அளவிலான பழங்கள், சேலட்கள், பச்சை இலை காய்கறிகள் ஆகியவை அமைதியான உடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும். மனதையும் அமைதியாக வைத்துக் கொள்ள உதவும். சரியான நேரத்தில் சரி விகிதத்திலான உணவும், ஆழ்ந்த உறக்கமும் மன அமைதிக்கு இட்டுச் சென்று அனைத்து வியாதிகளிலிருந்தும் கவசமாய் நம்மைப் பாதுகாக்கும்
இதையும் படிங்க...இத மட்டும் சாப்பிடுங்க, எந்தத் தொற்றும் அணுகாது!