சென்னை: தினமும் நடை பயிற்சி செய்வது நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என ஏதோ ஒரு கட்டுரையில் பார்த்துவிட்டு செய்யலாமா வேண்டாமா என ஒரு வாரம் யோசித்து அடுத்த ஒரு வாரம் பொதுக்கூட்டம் நடத்தி, பின் ஒரு வளியாக கிளம்பலாம் என் முடிவெடுத்து மாநாடு போல ஒரு நண்பர்கள் பட்டாளத்தையே திரட்டிக் கொண்டும் போவது, அல்லது தனியாக நடைபயிற்சி செய்யப் போகிறோம் சலிப்பாக இருக்கும், பொழுது போக்க வேண்டும் என கூடவே ஸ்மார்ட் போனையும், ஹெட்போனை யும் எடுத்து சென்று பாடல் கேட்ப்பது தான் தற்போதைய ட்ரெண்டிங் நடைபயிற்சியாக இருக்கிறது.
ஆனால் உண்மையில் சரியான முறையில் நடை பயிற்சி செய்வது எப்படி என தெரிந்து கொண்டு அதனை பின்பற்றுவதுதான் சிறந்த ரிசல்ட்டை கொடுக்கும். நடைபயிற்சி மூலம் உடலுக்கான ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் மனதிற்கான ஆரோக்கியத்தையும் சேர்த்து எடுத்துக் கொள்வது நம் கைகளில் தான் உள்ளது. பொதுவாகவே நாம் நடை பயிற்சி மேற்கொள்ளலாம் என் முடிவெடுக்கும் போது வேதாலம் போல யாரையாவது துணைக்கு அழைத்து செல்வோம், பாடல் கேட்டுக்கொண்டே நடப்போம் அல்லது யாரிடமாவது போனில் பேசிக்கொண்டே நடப்போம்.
ஆனால் இதற்கு பதிலாக அமைதியான அந்த காலை சூழலை ரசித்துக் கொண்டு கைகளில் போன்கள் இல்லாத தனியான நடைபயிற்சியை சற்று யோசித்துப் பாருங்கள். இது அந்த நாளையே மிகப் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும். ஆரம்பத்தில் இப்படி தனியாக நடை பயிர்சி செய்வது மிகவும் கடிணமாக தெரியலாம் ஆனால் இந்த முறை ஒரு நல்ல முடிவை கொடுக்கும் என்பதை நாம் உணர முடியும். நடை பயிற்சியின் போது தனிமையை உணராமல் இருக்க சில வழிகள் உள்ளது.
தனியாக நடைபயிற்சி மேற்கொள்ள டிப்ஸ்?
புது பாதை அமைக்கலாம்: சில நேரம் நீங்கள் இதை உணர்ந்திருக்கக்கூடும். வீட்டில் இருந்து பள்ளிக்கோ, கல்லூரிக்கோ அல்லது ஏதேனும் ஒரு பழக்கப்பட்ட இடத்திற்கோ செல்ல கிளம்பி அந்த இடத்தை அடைந்திருப்பீர்கள் ஆனால் சில நேரம் கழித்து யோசித்து பார்க்கையில் வீட்டை விட்டு வெளியே வந்த வரை தான் நம் ஞாபகத்தில் இருக்கும், எந்த வழியில் வந்தோம்?, யாரை எதிரில் சந்தித்தோம்? வந்த வழியில் என்ன நடந்தது? என யோசித்து பார்த்தால் எதுவும் ஞாபகத்தில் இருக்காது. இதற்கு காரணம் என்ன தெரியுமா. நாம் நடந்து வந்த நேரம் முழுவதும் விழிப்புடன் இல்லாதது தான்.
பின் எப்படி பாதை மாறாமல் சரியாக நான் நினைத்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம் என நீங்கள் நினைக்கலாம். நாம் பல மாதங்களாக அந்த ஒரே பாதையில் மட்டும் தான் பயணித்திருப்போம். இது நம் மூலைக்குப் பழக்கப்பட்டுவிடும். இதனால் நாம் என்ன விதமான யோசனையிலிருந்தாலும் உடல் அந்த வேலையைச் செய்துகொண்டே இருக்கும்.
இதையும் படிங்க: சமையல் செய்வது மன அழுத்தத்தை குறைக்குமா?
அதனால் நீங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது தினமும் ஒரே பாதையில் செல்லாமல் தினமும் அல்லது சில நாள் இடைவேளையில் பாதையை மாற்றி வேறு பாதையில் நடந்து பாருங்கள். இது உங்கள் மனதை விழிப்புடன் வைத்திருக்கும். மேலும் நடைப்பயிற்சியின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தும்.
இயற்கையுடன் பழகும் வாய்ப்பு: நாம் செய்யும் அனைத்து செயல்களையும் நேர்மறையான அணுகும் முறை என்பது ஒரு நல்ல பழக்கம். இயற்கையோடு சேர்ந்து வாழும் மனிதருக்கு இது எளிதாக அமைய வாய்ப்பு உள்ளது. இயற்கையான சுற்றுச் சூழல் நம் புலன்களைத் தூண்டும். நடக்கும் வழியில் அங்குள்ள செடி கொடிகளையும், வண்ணங்கள் நிறைந்த பூக்களையும் அதன் நறுமணங்களையும் அனுபவித்துக்கொண்டே நடக்கலாம்.
இது நம் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல் மன அமைதிக்கும் இடம் அழிக்கும். இயற்கையான நடைப்பயணம் உங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தவும், சுற்றியுள்ள விஷயங்களைப் பற்றிய விவரங்களை எடுத்துக்கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் உதவும்.
தாவரங்களால் உற்பத்தி செய்யப்படும் பைட்டான்சைடுகள் நமது வெள்ளை இரத்த அணுக்களின் அளவை அதிகரிக்க உதவுகிறது என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர், இது நோய் எதிர்ப்பு அமைப்பு நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
போக்குவரத்து நெரிசல் இல்லாத பாதையைத் தேர்ந்தெடுக்கலாம்: தினமும் போக்குவரத்து நெரிசல் சத்தத்திலும், சுற்று சூழல் மாசுபாடுகளுக்கும் இடையில் வெளியில் சென்று வருகிறோம். அந்த வாகனங்களின் இரைச்சல் நம் மனதை பாதிக்கும், சுற்றி உள்ள மாசு நம் உடலை பாதிக்கும். இவற்றைத் தவிர்த்து தினம் கிடைக்கும் இந்த நடைப்பயிற்சிக்கான நேரத்திலாவது அமைதியான பாதையைத் தேர்ந்தெடுக்கலாம்.
இயற்கையில் நடப்பது கவலை, மனச்சோர்வு மற்றும் SAD - பருவகால பாதிப்புக் கோளாறு போன்ற மனநலப் பிரச்சினைகளை எளிதாக்குகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. இயற்கைக் காட்சிகளை வெறுமனே கவனிப்பது நேர்மறையான உணர்ச்சிகளைத் தூண்டும் என கூறப்படுகிறது.
புது விசயங்களைக் கண்டுபிடிக்கலாம்: இயற்கையை ஆராய்வது என்பது உங்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும், உங்கள் கவனிக்கும் திறனை மேம்படுத்தவும் உதவும். இயற்கையான சூழலில் நீங்கள் தனியாக இருக்கும் போது சுற்றி இருக்கும் அரிதான செடிகள், விளங்குகள் பூச்சிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த முடியும்.
தினமும் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு ‘எண்டார்பின்’ எனும் ஹார்மோன் சுரக்கிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து, மன அமைதிக்கு வழி வகுக்கிறது. நீங்கள் நாள் முழுவதும் உற்சாகமாக உழைப்பதற்கு இது உதவும்.
தனியாக நடப்பது மன ஆரோக்கியத்திற்கு நல்லதா?
நமது மன ஆரோக்கியத்திற்கு நமக்கான தனிப்பட்ட நேரம் மட்டுமே முக்கியம். நீங்கள் நடைபயிற்சி செய்வதை ரசிக்கிறீர்கள் என்றால், தனிமையில் நடப்பது என்பது அந்த பொன்னான நேரத்தை தனியாகக் கழிப்பதற்கும் உங்கள் உள்மனத்துடன் இணைவதற்கும் ஒரு வழியாக இருக்கும். ஒவ்வொரு நபரும் தன்னையும் தனது சொந்த தேவைகளையும் விருப்பங்களையும் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்துவதற்காக அவ்வப்போது தனிமைப்படுத்தப்படுவது நன்மையே..
இதையும் படிங்க: ஓவர் டியூட்டியால் இவ்வளவு பாதிப்புகளா?.... மருத்துவர்கள் விளக்கம்!