சென்னை: மனிதனின் வாழ்வியல் மாற்றம், உணவு பழக்கம், போதை பழக்கம், மரபணு மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணத்தால் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மார்பக புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 4 சதவீதம் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மார்பக புற்றுநோய்: மார்பகத்தில் உள்ள செல்கள், கட்டுப்பாடு இன்றி பெருகும் நிலையில் மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது. 30 வயதுக்கு மேல் முதல் பிரசவம், கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வது, கொழுப்பு உள்ள உணவுகளை உண்ணுதல், மது அருந்துதல் போன்றவற்றால் மார்பக புற்றுநோய் ஏற்படும். உடல் பருமன், வயது முதிர்ச்சி, அதிகமாக மது அருந்துதல், புகைபிடித்தல், கதிர்வீச்சு பாதிப்பு மற்றும் மரபணு வாயிலாகவும் மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது.
இது மட்டுமில்லாமல், முதல் கர்ப்பத்தின் போது வயது, மாத விடாய் வயது போன்றவைகளாலும் மார்பக புற்றுநோய் ஏற்படும். பெண்களை தாக்கும் இந்த புற்றுநோய், தற்போது அதிகளவில் பரவி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விட்டமின் டி மார்பக புற்றுநோய் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மார்பக புற்றுநோய்க்கும், விட்டமின் டி-க்கும் என்ன தொடர்பு: குறைந்த அளவு விட்டமின் டி சத்துள்ள உள்ள பெண்களை மார்பக புற்றுநோய் அதிகம் தாக்குவதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. இதுவே விட்டமின் டி சத்து, அதிகம் உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் தாக்கம் குறைவாக காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மார்பக செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு கால்சியம் உதவுகிறது.
மார்பக புற்றுநோயின் செல்கள் பெருகுவதை விட்டமின் டி கட்டுப்படுத்துகிறது. மேலும் உடலில் உள்ள சேதமடைந்த செல்களை வெளியேற்றவும் உதவுகிறது. மேலும் புற்றுநோயால் ஏற்படும் அழற்சியை தடுக்கிறது. இது மட்டுமில்லாமல் உடலில் கட்டிகளுக்கு இரத்தம் செல்வதையும் தடுக்கிறது.
விட்டமின் டி- யை பெறுவது எப்படி: சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி, மருத்துவ பரிசோதனை போன்றவற்றை பின்பற்ற வேண்டும். சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் விட்டமின் டி-யைப் பெற முயற்சிக்க வேண்டும். விட்டமின் டி நிறைந்த பால், தயிர், கிழங்கான் மீன் (Salmon), சூரை மீன் (Tuna) போன்றவற்றை உட்கொள்ளலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி, விட்டமின் டி மாத்திரைகளை உட்கொள்ளலாம்.
இதையும் படிங்க: நீரிழிவு நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா? கூடாதா?.. அமெரிக்க அளித்த அதிர்ச்சி தகவல்!