கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பல மாதங்கள் அல்லது ஒரு ஆண்டு கழிந்தப் பின்னர் பலரும் தங்களுக்கு மூட்டு, இடுப்பு, தோள்பட்டை போன்றவற்றில் வலி ஏற்படுவதாக கூறுகின்றனர். இந்த நிலைமையை மருத்துவர்கள் அவாஸ்குலர் நெக்ரோஸிஸ் எனத் தெரிவித்துள்ளனர்.
இதற்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறப்பட்டாலும், கரோனா தொடர்பான அவாஸ்குலர் நெக்ரோஸிஸ் போன்ற பக்கவிளைவுகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. கரோனா தொற்று சிகிச்சையின்போது ஸ்டெராய்ட்கள் பயன்படுத்தப்பட்டதே இந்த எலும்புப் பிரச்னைகளுக்கு மூலக் காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
"அதிகப்படியாக ஸ்டெராய்களை பயன்படுத்துவதால் எலும்பு மஜ்ஜைகளில் நீர்கட்டு ஏற்படுகிறது. இது எலும்புக்கு செல்லும் இரத்த விநியோகத்தை நிறுத்துகிறது" என்கிறார் மருத்துவர் சுப்பங் அகர்வால்.
அவர் மேலும் கூறுகையில், "அதிகப்படியான ஸ்டெராய்டுகள் பயன்படுத்தப்படுவதால் அவாஸ்குலர் நெக்ரோஸிஸ் ஏற்படுகிறது. இருப்பினும் அது தற்போது அடிக்கடி ஏற்படுவது ஸ்டெராய்டுகளின் தாக்கத்தினால் என்று கூறலாம்" என்றார்.
அவாஸ்குலர் நெக்ரோஸிஸ் அல்லது எலும்பு இறப்பு என்பது எலும்புக்கு இரத்த விநியோகம் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக நிறுத்தப்படுவதால் ஏற்படுகிறது. எலும்புக்கு இரத்த விநியோகத்தை மேம்படுத்துவதன் மூலம் அல்லது எலும்பு செல்கள் இறப்பதை தடுப்பதன் மூலம் அவாஸ்குலர் நெக்ரோஸிஸ்க்கு சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
அவாஸ்குலர் நெக்ரோஸிஸுக்கு உடனடி சிகிச்சை தேவை. நோயாளிக்கு வலி தொடர்ந்தால், அவர்கள் உடனடியாக எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து நோயாளிக்கு எலும்பு இறப்பு ஏற்பட்டுள்ளதா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா எனத் தெரிந்துகொள்ளலாம். பிரச்னை முற்றிவிட்டால், அறுவை சிகிச்சை மேற்கொண்டு சரி செய்யலாம்.
அவாஸ்குலர் நெக்ரோஸ் புகை பிடித்தல், மது அருந்துதல் காரணமாகவும் ஏற்படலாம். ஸ்டெராய்ட் பயன்பாட்டுடன் புகைப்பிடித்தல், மது அருந்தும் பழக்கம் இருந்தால் எலும்பு இறப்பு ஏற்படும். எனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து ஸ்டெராய்ட் எடுத்துக்கொண்டது தெரியவந்தால் அவர்கள் புகை பிடிக்கும், மது அருந்தும் பழக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: இதயத்தை இரும்பாக்கும் படி ஏறுதல்... இவ்வளவு நன்மைகளா!