நியூயார்க் (அமெரிக்கா): கரோனா பெருந்தொற்றாக பரவி கொண்டிருந்த நேரத்தில், உலக மக்கள் அனைவருக்கும் ஒரு வரபிரசாதமாக அமைந்தது தான் கரோனா தடுப்பூசி. இந்த தடுப்பூசி வந்த புதிதில் பலர் அதை நிராகரித்தாலும், பாதுகாப்பை கருத்தில் கொண்டு உலக மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் கரோனா தடுப்பூசி பெண்களுக்கு கருச்சிதைவை ஏற்படுத்தும் என்றும், ஆண்களுக்கு விந்தணு குறைப்பாட்டை ஏற்படுத்தும் என்றும் ஒரு பேச்சு அல்லது விமர்சனம் கிளம்பியது. இந்த கருத்து உண்மையானதா? அல்லது உண்மைக்கு புறம்பானதா? என்பதை அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் முடிவுகள் மனித இனப்பெருக்கம் தொடர்பான கட்டுரைகள் வெளியிடப்படும் இதழில் (Human Reproduction journal) தகவல் வெளியிடப்பட்டது. அதில், அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள 1,815 பெண்களின், கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது பற்றிய தரவு மற்றும் கருச்சிதைவு பற்றிய தரவு ஆகியவை ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
2020 டிசம்பர் முதல் 2022 நவம்பர் வரை உள்ள தரவுகளை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வானது, கர்ப்பம் தரித்த நாளில் இருந்து, கருச்சிதைவு நிகழ்ந்த நாள்வரை கண்காணிக்கப்பட்டது. கருக்கலைப்பு மாத்திரைகள், ஊசிகள் மூலம் நிகழ்த்தப்பட்ட கருச்சிதைவு, எக்டோபிக் கர்ப்பம் போன்றவையும் கண்காணிக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் முன்னணி எழுத்தாளர் ஜெனிபர் ய்லாண்ட், கரோனா தடுப்பூசியை போடப்படாத பெண்களுடன் ஒப்பிடும் போது தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயம் சற்று குறைவாகவே இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்த கண்டுபிடிப்பின் முடிவுகள் மக்களிடம் அதிகம் போய் சேர வேண்டும் என்று கூறியுள்ளார்.
தடுப்பூசி போடாதவர்களுக்கு 26.6 சதவீதமும், கருத்தரிப்பதற்கு முன் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 23.9 சதவீதமும், கருத்தரிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன் தடுப்பூசியை போட்டுகொண்டவர்களுக்கு 22.1 சதவீதமும் கருச்சிதைவு ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக ஆய்வு கூறுகிறது. தடுப்பூசி போடாதவர்களுக்கே அதிக கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்றும், கரோனா தடுப்பூசியால் கருச்சிதைவு ஏற்படவில்லை எனவும் அறியலாம்.
இதையும் படிங்க: உங்கள் குழந்தைகள் இடுப்பு மூட்டு வலிப்பதாக கூறுகின்றனரா?... பெர்தஸ் நோயாக இருக்கலாம். கவனம் தேவை...