கருத்தடைக்கான நவீன வழிமுறைகளைப் பற்றி ஆழமாக விவாதிக்கும் முன்னர் கருத்தடை என்றால் என்ன? அதனால் என்ன பயன் என்பதை நாம் முழுமையாக புரிந்துகொள்வது அவசியம். கருத்தடையில், இரண்டு முறைகள் உள்ளன. முதலாவது, குடும்ப கட்டுப்பாடு, மற்றொன்று தற்காலிக கருத்தடை முறையாகும்.
ஒரு குழந்தை பிறந்த பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு இடைவெளி விட்டு மற்றொரு குழந்தை பிறக்க வேண்டும். அப்போது தான் தாயின் உடல் நலம் பாதுகாக்கப்படும். அடுத்தடுத்து பிறக்கும் குழந்தைகளும் ஆரோக்கியமாக பிறக்கும். இதற்காக ஒரு குழந்தை பிறந்த பின் உரிய இடைவெளிக்காக சிலர் கருத்தடை மாத்திரை பயன்படுத்துதலையும், குழந்தை உருவாகாமல் இருக்க கருத்தடை முறைகளையும் பின்பற்றுகின்றனர்.
மாத்திரையை விட தற்போது, தற்காலிக கருத்தடை ஊசியை பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த ஊசி தற்போது செலுத்தப்படுகின்றன. இந்த ஊசி எடுத்துக்கொள்பவர்களுக்கு சில பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன.
கருத்தடை ஊசி என்றால் என்ன?
கருத்தடை ஊசி ஒரு பெண் கருத்தரிப்பதைத் தடுக்கிறது. இது கருமுட்டையைத் தேடி வரும் விந்தணுவைத் தடுப்பதில்லை. மாறாக, இது கருப்பையிலிருந்து முட்டை வெளியாவதைத் தடுப்பதோடு, ஆணின் விந்தணுக்கள் கருப்பையில் நகர முடியாத சூழலையும் ஏற்படுத்திவிடுகிறது. இவற்றின் விளைவாக, பெண்கள் கர்ப்பம் அடைவதில்லை.
வதந்திகளை நம்பாதீங்க... மென்சுரல் கப் குறித்து மருத்துவரின் விளக்கம்!
கருத்தடைகளுக்கு ஊசிகளை பயன்படுத்துவதால் தேவையற்ற கர்ப்பம் தவிர்க்கப்படுகிறது. கருத்தரிப்பைத் தடுக்க மாத்திரைகள், ஆணுறை போன்ற பல வழிகள் உள்ளன. அவற்றால் கருத்தரிப்பைத் தடுக்கவும், பால்வினை நோய்களிலிருந்து காக்கவும் முடியும். இவை நவீன முறைகளாக இருந்தாலும் கூட, கருத்தடை ஊசிகள்தான் பாதுகாப்பானதாக இருக்கும்.
கர்ப்பத்தை தடுக்க புரோஸ்டோஜென் என்ற ஹார்மோனை கருத்தடை ஊசி ரத்தத்தில் செலுத்துவதாக லண்டனின் தேசிய சுகாதார சேவை மையத்தின் அறிக்கைத் தெரிவித்துள்ளது.
இந்த ஊசி கருப்பையின் வாய்ப்பகுதியிலிருக்கும் கோழையை அடர்த்தியாக்குகிறது. இதனால் விந்தணுக்கள் உள்புகாமல் தடுக்கப்படுகிறது. கருத்தடை மாத்திரைகளைச் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளாத பெண்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
இந்த ஊசி வழியாக சுமார் 12 விழுக்காடு பெண்களுக்கு முதல் குழந்தை பெறுவதையும், இரண்டாம் குழந்தைக்கான கருத்தரிக்கும் வாய்ப்பையும் தள்ளிப்போடலாம். இந்த முறையில் 99.5 விழுக்காடு வரை கருத்தரிக்க வாய்ப்பில்லை என்பது ஒரு கணிப்பு.
இதனை நீங்கள் கருவுறாத எந்தவொரு மாதவிடாய் சுழற்சி காலத்திலும் எடுத்துக்கொள்ளலாம். வயிறு, தொடை, கைகளில் மேல்புறம், அடிப்பகுதியில் இந்த ஊசி செலுத்தப்படும். இதன் மூலம் 12 முதல் 14 வாரங்கள் வரை கருத்தருப்பை ஒத்தி வைக்கலாம். நீங்கள் தாமதமாக ஊசி எடுத்துக் கொண்டால் 96 விழுக்காடுதான் பயனளிக்கும். அதாவது, இந்த ஊசி போட்டுக்கொள்வதை நிறுத்திக்கொண்டால், 6 - 10 மாதங்களுக்குப் பிறகு, மறுபடியும் கருத்தரிக்க வாய்ப்பாகிவிடும்.
இந்த ஊசியை நீங்கள் பயன்படுத்தும் பட்சத்தில் உங்களது இணையரோடு உடலுறவு கொள்ளும்போது பதற்றம் கொள்ளத் தேவையில்லை. இந்த ஊசியை 18-லிருந்து 45 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறாக, பெண்கள் கருத்தரிப்பதை சில ஆண்டுகளுக்கு தள்ளிப்போட உதவுகிற தற்காலிக கருத்தடை முறையாக இது செயல்படுகிறது.
பலன்கள் என்ன?
- பெரும்பாலான பயனர்களுக்கு இனப்பெருக்க உறுப்பில் அதிகமான ரத்தப் போக்கு ஏற்படாது
- மாதவிடாயின் போது குறைவான வலி ஏற்படும்
- இந்த ஊசியால் 12-14 வாரங்களுக்கு கருத்தரிப்பது குறித்து கவலைப்பட வேண்டாம்
- தாய்ப்பால் கொடுக்கும் போது இதைப் பயன்படுத்தலாம்
- மற்ற மருந்துகளை நிறுத்த தேவையில்லை
இந்த ஊசியால் ஆரம்பத்தில் மாதவிலக்கு முறை தவறிப்போகும் (அ) உதிரப்போக்கு அதிகமாக இருக்கும், பிறகு முழுவதுமாக நின்றுவிடும். சிலருக்கு உடற்பருமன் ஏற்படும். பாலுறவில் நாட்டமும் ஈடுபடுதலும் குறையும். மேலும், இந்த ஊசியை போட்டுக்கொள்வது எளிது என்பதால் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் தற்காலிக கருத்தடை முறைகளான ஆணுறை பயன்பாடு, கருத்தடை மாத்திரைகள், லூப், காப்பர்-டி பொருத்துதல் ஆகிய பாதுகாப்பான கருத்தடை முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறைந்துவிடுகிறது.
நவீன யுக பெண்களுக்கு இது சிறந்த முறையாக இருந்தாலும் கூட மருத்துவரின் ஆலோசனையோடு இதைப் போட்டுக் கொள்வதே நல்லது.
இதையும் படிங்க:கட்டாயக் கருத்தடை உத்தரவை திரும்பப் பெற்றது மத்தியப் பிரதேச அரசு!