செடி வளர்த்தலில், சரியான தொட்டியை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து மக்களுக்கு அதிகளவு புரிதல் இல்லை. இதன் விளைவாக, செடி அவர்கள் விரும்பியபடி வளராமல் போகும் அல்லது அதிகப்படியான நீர்ப்பாசனம் மற்றும் உரங்களால் அது இறந்துவிடும். எனவே, உங்கள் செடிக்கு சரியான தொட்டியைத் தேர்ந்தெடுப்பதற்கான அடிப்படைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
பல்வகைத் தொட்டிகளும், பயனும்
தொட்டிகளைச் செடி, கொடிகளின் வளர்ச்சி , வயது, வைக்க வேண்டிய இடம் ஆகியவைகளின் தன்மைக்கேற்ப கையாள்வது அவசியமாகும். தொட்டிகள் கனமின்றி லேசாக இருப்பது நலம். சிமெண்ட் தொட்டிகளைவிட மண் தொட்டிகளே தோட்டங்களில் கையாளச் சிறந்தவை.
தொட்டிகளை தரைத் தோட்டம், மாடித் தோட்டம், தாழ்வாரத் தோட்டம் ஆகிய எல்லாப் பகுதிகளிலும் பயன்படுத்தலாம். செடிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப பயன்படும் பல்வேறு தொட்டிகளைப் பற்றியும், அவற்றைப் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் இனி கான்போம்.
விதைப்புத் தொட்டிகள்
இத்தொட்டிகள் அகன்ற வாயுடன் சுமார் 15 முதல் 18 செ.மீ உயரமிருக்கும். இவைகளில் மணல் நிரப்பி, விதைகளை ஊன்றி முளைக்க விடலாம். முளை வந்த பின் சுமார் 2 வாரம் நாற்றை வளர்க்கலாம். இத்தொட்டிகளில் பதியன்களையும் வைத்து மர நிழலில் வைக்கலாம்.
நாற்றுத் தொட்டிகள்
இத்தொட்டிகள் சுமார் 12 செ.மீ நீளமும் 18. செ.மீ அகலமும் 24 செ.மீ உயரமும் கொண்டவை. விதைப்புத் தொட்டிகளில் வளரும் நாற்றுகளை எடுத்து இத்தொட்டிகளில் நட்டு சுமார் 2 மாதம் வரை வளர்க்கலாம். தொட்டி ஒன்றுக்கு 1 அல்லது 2 நாற்றுகளை நடுவதே சிறந்தது. அதே வயதுள்ள பதியன்களையும் இத்தொட்டிகளிலேயே வளர்க்கலாம்.
வருடச்செடி தொட்டிகள்
இத்தொட்டிகள் சுமார் 30 செ.மீ அகலமும் 45 செ.மீ உயரமும் கொண்டவை. இவைகளில் செடிகள் ஒரு முறை பூக்கும் காலம் வரை பயன்படுத்தலாம். இவையே தோட்டத்திற்கு அழகு சேர்ப்பனவாகும். இவ்வகையில் டேலியா, கல்வாழை, அழகு சேம்பு போன்ற கிழங்கு வகை தாவரங்களையும், நீண்ட கால வயதுள்ள குரோட்டன், பெரணிச் செடி வளர்த்து விருத்தி செய்யலாம்.
பல வருடச் செடித் தொட்டிகள்
இத்தொட்டிகள் பனைத்தொட்டிகள் என்று அழைக்கப்படும். இவைகளின் அகலம் சுமார் 35 செ.மீட்டரும் உயரம் 50 செ.மீ ஆகும். இவைகளை அடிக்கடி இடம் மாற்ற இயலாது. இவைகளில் நீண்ட காலம் வாழும் போன்வில்லா, அழகுப்பனை போன்ற செடிகளையும், கொடிகளையும் வளர்க்கலாம்.
அழகுத் தொட்டிகள்
சிமெண்ட்டால் செய்யப்பட்ட சிற்ப வேலைப்பாடமைந்த வேறுசில அழகிய தொட்டிகளையும் பயன்படுத்திச் சில செடிகொடிகளை வளர்க்கலாம். சிமெண்ட் தொட்டிகள் சிறியதாக கிடைப்பது இல்லை. இருப்பினும் இத்தொட்டிகள் நீண்ட காலத்திற்கு உழைக்கும்.
ஆனால் மரத்தொட்டிகளில் செடிகள் வளர்த்தால் பலவகைகள் விரைவில் மக்கிவிடும். எனவே மரத்தொட்டிகளில் நேரடியாக மண் போட்டு செடியை வைத்து வளர்ப்பதற்கு பொருத்தமாக இருக்கும். செடிகளை வளர்ப்பதற்கென்றே நல்ல வேலைப்பாடுகள் கொண்ட அழகிய பித்தளைத் தொட்டிகள் இருக்கின்றன. இவற்றின் விலை அதிகமாக இருக்கும்.
Also read: இதயத்தை பலப்படுத்த திணை அவசியம் - பூர்வகுடி உணவுமுறைக்கு பகுப்பாய்வு நிறுவனம் சான்று
மீன் தொட்டிகள் போன்று சிறு கண்ணாடித் தொட்டிகளிலும் செடிகளை வளர்க்கலாம். அல்லது சிறுசிறு கண்ணாடி ஜாடிகள், பாத்திரங்கள், தட்டுகள் போன்றவற்றிலும் செடிகளை வளர்க்கலாம். தற்சமயம் பல அழகிய வண்ணங்களிலும், உருவ அமைப்புகளிலும் பிளாஸ்டிக் தொட்டிகள் வந்துள்ளன. இவை மிகவும் லேசாக இருப்பதோடன்றி எல்லோரும் வாங்கக்கூடிய மலிவு விலையிலும் கிடைக்கின்றன.
அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தொங்கும் தொட்டிகளிலும் சில குறிப்பிட்ட செடிகளை வைத்து வளர்க்கலாம். இத்தொட்டிகளை வீட்டின் முற்றங்களிலும், தாழ்வாரங்களிலும், போரிடிகோவிலும் தொங்க விட்டு செடிகளை வளர்ப்பதால் அழகாக இருப்பதோடன்றி நம் உபயோகத்திற்கும் அதிக இடம் கிடைக்கும். சீடம், செப்ரினா, வெர்பினா, அஸ்பராகஸ் போன்ற செடிகளை தொங்கும் தொட்டிகளில் வளர்க்கலாம்.
செடிகளுக்கேற்ற தொட்டிகள்
எந்த வகைத் தொட்டியை உபயோகித்தாலும் முதலில் செடிக்கும் தொட்டிக்கும் பொருத்தம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பெரிய தொட்டிகளில் சிறிய செடிகளை வைக்க கூடாது. அதுபோலவே சிறிய தொட்டிகளில் பெரிய செடிகளையும் வைக்க கூடாது.
உயரமான செடிகளை உயரமான தொட்டிகளில் வைத்தால் தான் அழகாக இருக்கும். தொட்டிகள் எப்போதும் செடிகளைவிட பெரியதாக இருக்கக் கூடாது. செடிகள் தான் தொட்டியைவிட பெரியதாக இருக்க வேண்டும். தொட்டியின் வண்ணம் செடிகளோடு ஒத்துப்போக வேண்டும். தொட்டியின் நிறம் மிகவும் பளபளப்பாகவும் செடியின் அழகைக் குறைப்பதாகவும் இருக்ககூடாது.
Also read: வைட்டமின்கள், தாதுக்களின் நன்மைகள் என்னென்ன?
நிழலில் வளரும் தாவரங்கட்கு மரக்குடுவைத் தொட்டிகளையும் அகன்ற பரவி வளரும் செடிகளான பொன்னாங்கண்ணி, கோலியஸ், பட்டு ரோசா, வர்பினா, பெரணி ஆகியவைகட்கு அகன்ற வாயுடன், உயரம் குறைந்த கிண்ணத் தொட்டிகளையும் பயன்படுத்தலாம்.
மாடி மற்றும் தாழ்வாரங்களில் பயன்படுத்தும் தொட்டிகளில் அடிக்கடி வண்ணம் தீட்டியும், துடைத்துச் சுத்தம் செய்வது மிகவும் அவசியமாகும். தொட்டிகள் மட்டுமின்றி இரும்புக் கம்பிகள், வேலிகள், பந்தல் ஆகியவைகட்கு வண்ணம் தீட்டி அழகுபடுத்துவது அவசியம்.
பச்சை செடிகொடிகள் படரும் இடங்கட்கு சிவப்பு வர்ணமும், சிவந்த குரோட்டன் வகைச் செடிகட்கு பச்சை வெண்நிறமும் தீட்டி அழகு செய்யலாம். இவ்வாறு வர்ணம் தீட்டுவதால் அழகாக இருப்பதோடன்றி தொட்டிகளும் நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.
தொட்டிகளில் எரு தயாரித்து நிரப்புதல்
மாடித் தோட்டம் வளர்ப்பவர்கள் தம் வீடுகளில் கிடைக்கும் இலை, தழைகளையும், குப்பைக் கூழங்களையும் உணவுக் கழிவுகளையும் தொட்டிகளிலேயே போட்ட நிரப்பி மண் மூடி , எருவாக மக்கச் செய்து பயன்படுத்தலாம். விரைவில் அவை மக்க ஏதுவாக சிறிது நீர் தெளித்து ஈரமாக்கி வரலாம்.
தொட்டிகளில் மண்ணும் எருவும் நிரப்புதல்
செடிகள் நன்றாக வளர நல்ல காற்றோட்டமுள்ள கீழ் மண் அமைப்பும், ஈரமுள்ள மேல் மண் அமைப்பும் தேவை. தொட்டிகளின் மேல் மண்ணின் இலை மக்கு மண்ணும் , கீழ் மண்ணில் மணலும் சரளையும் இருக்குமாறு கலந்து இட வேண்டும். இதனால் நாம் ஊற்றும் நீர் இலை மக்கிலுள்ள சத்தைக் கரைத்து அடி மண்ணிலுள்ள வேருக்கு கொடுத்து விட்டுச் சரளை வழியாக வெளியேறிவிடுகிறது. இதனால் தான் தொட்டிகளில் செடிகள் நன்றாக வளர முடிகின்றது.
தொட்டிகளில் 5 முதல் 10 சதம் சரளையும், 30 சதம் மணலும், 30 சதம் மண்ணும், 10 முதல் 15 சதம் இலை மக்கும் இருக்குமாறு இட்டு செடிகளின் சிறந்த வளர்ச்சிக்கு வித்திடலாம்.
Also read: உடலின் கெட்ட கொழுப்பை குறைக்கும் வால்நட்ஸ்
தொட்டிகளில் அடிப்புறமுள்ள துவாரங்களை சரளையால் மூடி தண்ணீர் முழுவதுமாக வெளியேறும்படி கவனிப்பது அவசியம். தொட்டிகளில் இவ்வாறு மண்ணும், எருவும் நிரப்பும் வேலையை சரியானபடி கவனிக்காவிட்டால் தொட்டிகளில் ஈரம் இல்லாமல் செடிகள் வாடி வதங்கும் அல்லது அதிக நீர் தேங்கி வேர் அழுகும்.
வளரும் செடிகளுள்ள தொட்டிகளில் மண் வளம் குறைவாகவும், செடிகளின் வளர்ச்சி அதிகமாகவும் இருப்பதால் தொட்டிகளில் உள்ள மண்ணின் வளம் போதுமானதில்லை. இதை ஈடு செய்ய தொட்டிகளில் பிண்ணாக்கு, செயற்கை உரங்கள் மற்றும் எலும்புத் தூளை வருடம் இருமுறை பயன்படுத்தலாம். இவைகளை நேரிடையாக உபயோகிப்பதைவிட நீரில் கரைத்து பயன்படுத்துவது சிறந்தது.
பிண்ணாக்கு வகைகளை நேரிடையாக பயன்படுத்தினால் எறும்புகள் தோன்றி பிண்ணாக்குடன் செடி வேர்களையும் தின்று சேதம் விளைவிக்கும். ஆகவே திரவ உரங்களைப் பயன்படுத்தி செடிகளை நல்ல முறையில் வளர்க்கலாம்.