நம் நாட்டில் அந்தரங்க உறுப்புகளைக் குறித்து பெண்கள் மிகவும் ரகசியமாகவே விவாதங்களை மேற்கொள்வர். இந்த விவாதங்களும்கூட அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா என்றால் நிச்சயமாக நேர்மறையான பதில்கள் இல்லை. ஏனென்றால் அந்த உறுப்புகளில் இருக்கும் அறிகுறிகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வார்களே தவிர, அதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் சொற்ப எண்ணிக்கையிலான பெண்களே அறிந்து கொள்வார்கள்.
சமீபத்தில் எனது கிராமத்தில் மார்பகப் புற்றுநோய் சார்ந்த மருத்துவ முகாம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த முகாமில் கலந்து கொள்ள பெண்கள் காட்டிய ஆர்வம் மிகவும் சொற்பம். அதற்கு அவர்கள் கூறிய காரணங்களில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.
- வீட்டு வேலைக்கு நடுவில் எதற்கு வீண் பரிசோதனைகள்!
- அங்கே எப்படி பரிசோதிப்பார்கள்? ஆடைகளைக் களைய வேண்டுமா?
- அந்தரங்க உறுப்புகளைப் பரிசோதித்து ஏதேனும் நோய் எனக் கூறிவிட்டால் மேற்கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ள அலைய வேண்டுமே?
- அந்த இடத்தை எல்லாம் எப்படி காட்டுவது மற்றும் பல.,
இது போன்ற தயக்கங்களுக்கு முக்கியக் காரணம், பெண்கள், வீட்டில் உள்ள மற்றவர்களின் உடல்நலனில் காட்டும் அக்கறையை தங்கள் மேல் செலுத்தாதது. அந்தரங்க உறுப்பைக் காட்டுவது என்பதை மருத்துவரீதியாக அணுகாமல் கலாச்சாரரீதியாக அணுகும் கட்டுப்பெட்டித்தனம்.
இது போன்ற தயக்கங்களையும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் விதமாக 1985ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு அக்டோபர் மாதத்தை மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அறிவித்தது.
அப்போதிருந்து அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் மார்பகப் புற்று நோய் மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மார்பக புற்றுநோய் - பிங்க ரிப்பன்
பிங்க் நிற ரிப்பன் இந்நோய்க்கு எதிராக போராடுபவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமான குறியீடு. மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கு மரியாதை அளிப்பது, நோயை முன்கூட்டியே அறிவது ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடையாளமாகவே குறிப்பிடப்படுகிறது.
மார்பகப் புற்றுநோய் குறித்த கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சில உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர உஷாலட்சுமி மார்பகப் புற்றுநோய் மையம், கிம்ஸ்-உஷாலட்சுமி மார்பகப் புற்றுநோய் சிகிச்சை மையத்தின் இயக்குநரும் மருத்துவருமான ரகுராமிடம் பேசினோம்.
உலக அளவில் மார்பகப் புற்றுநோய்
உலகெங்கிலும், ஒவ்வொரு ஆண்டும் 21 லட்சம் பேர் புதிதாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அதே சமயம் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் ஆறு லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் இந்நோயுடன் போராடி உயிரிழக்கின்றனர்.
இந்திய அளவில் மார்பகப் புற்றுநோய்
இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பப்பை புற்றுநோய்யைப் போல பெண்களைத் தாக்கும் புற்றுநோயின் வரிசையில் மார்பகப் புற்றுநோயும் இந்தியாவில் பொதுவான நோயாக மாறிவிட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் இரண்டு பெண்களில் ஒருவர் அதனுடம் போராடி இறுதியில் உயிரிழக்கிறார்.
ஆண்டுக்கு 87 ஆயிரம் பெண்கள் மார்பகப் புற்றுநோய் காரணமாக உயிரிழக்கின்றனர். புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது ஒவ்வொரு 10 நிமிடத்திற்கு ஒருவர் இந்நோய் பாதிப்பால் மரணிக்கிறார். நோயின் நிலை தீவிரமடைந்த பின்னர் தான் 60 விழுக்காட்டினர் இது குறித்து சுதாரித்து விழிப்படைகின்றனர். போதிய விழிப்புணர்வின்மை, நாடு முழுவதுமுள்ள மக்கள்தொகை ஆகியவற்றுக்கு ஏற்றபடி, மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் இல்லாததுதான் இதற்கு முக்கியக் காரணங்களாகும்.
கட்டுக்கதை
மார்பகத்தில் வரும் கட்டிகள் எல்லாமே புற்றுநோய்தான்.
உண்மை
10இல் ஒன்பது மார்பகக் கட்டிகள் புற்றுநோயல்ல. ஹார்மோன் சார்ந்து கூட மார்பகத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். இதற்கு மார்பகம் சார்ந்த மருத்துவரை சந்திப்பது அவசியம். மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய மார்பகம் சார்ந்த அனைத்துப் பரிசோதனைகளையும் மேற்கொள்ளலாம்.
முதலாவதாக, மார்பகப் புற்றுநோயை தொடக்க நிலையில் அறிய உதவும் ‘மாமோகிராம்’ (Mammogram) எனும் பரிசோதனை, அடுத்ததாக அகச்சிவப்பு கதிர்களைக் கொண்டு செய்யப்படும் இன்ப்ரா ரெட் ரேஸ் பரிசோதனை. இவற்றை மேற்கொண்டு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அல்ட்ராசவுண்ட் (ultrasound) மற்றும் பீரிஸ்ட் பயொப்ஸி ( ultrasound guided core needle biopsy ) பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
இந்தப் பரிசோதனையில் எந்த வகைப் புற்றுநோய் உள்ளது என்பது கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. வலியில்லாத இந்தப் பரிசோதனை, மார்பகத்தில் இருக்கும் கட்டி புற்றுநோயா என்பது குறித்த துல்லியமான முடிவுகளைக் காட்டும்.
கட்டுக்கதை
மார்பகப் புற்றுநோய் வயதான பெண்களை மட்டுமே தாக்கும்.
உண்மை
மேற்கத்திய நாடுகளில் 50 வயதுக்கும் மேற்பட்ட வயதில் உள்ள பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது. எனினும் எந்த வயதிலும் மார்பகப் புற்றுநோய் வரலாம் என்பதுதான் உண்மை. இந்தியாவில் 50 வயதுக்கும் கீழானோருக்கு இந்நோய் பாதிப்பு ஏற்படுவதே அதற்கு சான்று. பெரும்பாலான மார்பகப் புற்றுநோயாளிகள் 40 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டப்பட்டவர்களாக இருக்கின்றனர்.
கட்டுக்கதை
ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராது.
உண்மை
ஆண்களுக்கு பெண்களைப் போன்ற மார்பகங்கள் இல்லையென்பதால் அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படாது என பெரும்பாலானோர் நினைக்கின்றனர். ஆனால் இருபாலருக்கும் மார்பகத் திசு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலக அளவிலான ஆண்களில் ஒரு பகுதியினருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. இது குறித்து எவ்வித புள்ளிவிவரங்களும் இல்லையென்றாலும், லண்டனில் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 300 பேர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். (மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் மொத்த விழுக்காட்டில் 1 சதவிகிதம்)
கட்டுக்கதை
மார்பகப் புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது, அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து நமக்குத் தெரியும்.
உண்மை
மார்பகப் புற்றுநோய்க்கான காரணங்கள் குறித்து நமக்கு இன்னும்கூட தெளிவாகத் தெரியவில்லை. இந்நோய் ஏற்படுவதற்கான சில ஆபத்தான காரணிகள் குறித்து மட்டும்தான் நமக்குத் தெரியும். பெண்ணாக இருப்பதும், வயது முதிர்வும் இதற்கு மிகமுக்கியக் காரணிகள்.
மார்பகப் புற்றுநோய்க்கான காரணிகள்
- குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வந்திருக்குமேயானால், அந்தக் குடும்பத்தில் பிறந்த மற்றவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- ஒருமுறை மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டால் மீண்டும் வரலாம்.
- மாதவிடாயின் ஆரம்பம் (12 வயதிற்கு முன்னர்)
- மாதவிடாய் நின்று போதல் (55 வயதிற்கு முன்னர்)
- குழந்தையின்மை, 30 வயதிற்கு மேலாக முதல் குழந்தைபேறு அடைவது.
- மாதவிடாய் நின்ற பிறகு உடல் பருமன் அதிகரிப்பு (மெனோபாஸுக்கு பிறகு உடல்பருமன் அதிகரிப்பது)
- நீண்ட கால ஹார்மோன் சிகிச்சை பெறுவது.
கட்டுக்கதை
மேற்குறிப்பிட்ட காரணிகள் இருந்தால் மார்பகப் புற்றுநோய் நிச்சயம் வரும்.
உண்மை
மேற்குறிப்பிட்ட காரணிகளில் உங்களிடம் ஏதேனும் ஒன்று இருந்தாலும்கூட அது உங்களுக்கு நிச்சயமாக புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறிவிடமுடியாது. இருப்பினும் நீங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.
இதையும் படிங்க:கூச்சம் தகர்த்து மருத்துவர் ஆலோசனையைப் பெறுவோம், புற்றுநோயை வெல்வோம்!