நடப்பு மாதமான அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்டுகளுக்கும் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக கடந்த கட்டுரையில் மருத்துவர் ரகுராம் நமக்கு விளக்கினார். அவரிடம் மேலும் சில தகவலுக்காக உரையாடினோம்.
கட்டுக்கதை
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வந்திருக்குமேயானால், அந்தக் குடும்பத்தில் பிறந்த மற்றவர்களுக்கும் இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
உண்மை
மார்பகப் புற்றுநோய் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான பெண்களின் குடும்பங்களில் உள்ளோருக்கு அந்த நோய் இருப்பதில்லை. ஐந்து முதல் 10 விழுக்காட்டினருக்கு மட்டுமே மரபணு ரீதியாக இந்நோய் ஏற்படக்கூடும்.
கட்டுக்கதை
முன்கூட்டியே மரபணு சோதனையை மேற்கொள்வது மார்பகப் புற்றுநோயை அறிய உதவும்.
உண்மை
நிச்சயமாக இல்லை. பல பெண்கள் இது போன்ற அபாய சூழலை சந்திக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் 40 வயதுக்கு மேற்பட்ட ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் உறுதி செய்யப்பட்டு, அவர் ஆவரேஜ் ரிஸ்க் குரூப்பைச் சேர்ந்தவர்கள் எனில், அவருடைய குடும்பத்தில் உள்ளவர்கள் மரபணு பரிசோதனை செய்து கொள்வது அவசியமில்லாதது. இது தேவையற்ற அச்சத்தை உருவாக்கும். குடும்பப் பின்னணியில் ஒருவருக்கு இந்நோய் ஏற்படுனால் பிறருக்கு மரபணுரீதியாக ஏற்பட ஐந்து முதல் 10 விழுக்காட்டினருக்கு தான் வாய்ப்புள்ளது.
இவர்களுக்கு ஜீன்களில் (BRCA1 & BRCA2) மாற்றம் ஏற்பட்டிருக்கும். இந்த பாதிப்பு மரபணு சோதனையில் உறுதியானால் அவர்களின் வாழ்நாளில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. ஆனால் அனைவரும் அதற்கான மரபணு சோதனையை செய்து கொள்ள வேண்டும் என்பதில்லை. இந்தியா போன்ற நாடுகளில் உரிய ஆலோசனையின்றி மரபணு பரிசோதனை செய்து கொள்வதும் ஆபத்தானது.
யார் யார் மரபணு சோதனையை மேற்கொள்ளலாம்?
ஆவரேஜ் ரிஸ்க் குரூப்பைச் சேர்ந்தவர்களின் குடும்பப் பின்னணியில் மார்பகப் புற்றுநோய் வர வாய்ப்புகள் குறைவு. ஹை-ரிஸ்க் குரூப்பைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு எளிதில் ஏற்பட வாய்ப்புள்ளது. இவர்கள் மரபணு மருத்துவரின் முறையான ஆலோசனையை கேட்டறிந்த பின்னரே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஹை ரிஸ்க் குரூப்...
- ஒன்று (அ) அதற்கு மேற்பட்ட நெருங்கிய உறவினர்களுக்கு 40 வயதிற்கு முன்பாக மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது.
- இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட நெருங்கிய உறவினர்கள் எந்த வயதிலும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவது
- மார்பகப் புற்றுநோயும் கருப்பை புற்றுநோயும் கொண்ட நெருங்கிய உறவினர்களைக் கொண்டிருப்பவர்கள்
- இரண்டு மார்பகங்களிலும் புற்றுநோய் ஏற்பட்ட நெருங்கிய உறவினர்களை உடையவர்கள்
- மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டுள்ள ஆண் உறவினர்களை உடையவர்கள்
- மார்பகப் புற்றுநோய் செல்களில் (BRCA1 & BRCA2) பாதிப்பு ஏற்பட்ட பின்னணி உடையவர்கள்.
மரபணு சோதனை
- மரபணு சோதனை என்பது மிகவும் எளிமையான சோதனை. ஆனால் சற்று விலை அதிகம். (குறைந்தபட்சம் 50 ஆயிரம்)
- இந்தப் பரிசோதனை நேர்மறையாக இருந்தால் கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அதாவது 50 முதல் 85 விழுக்காடு மார்பகப் புற்றுநோய்க்கும், 15 முதல் 45 விழுக்காடு கர்ப்பப்பை புற்றுநோய்க்கும் வாய்ப்புள்ளது.
கட்டுக்கதை
புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண் ஹை-ரிஸ்க் குரூப்பைச் சேர்ந்தவர் எனில், இரண்டு மார்பகங்களையும் நீக்கும் சிகிச்சை தான் ஒரே வழி.
உண்மை
இயற்கையாகவே மாதவிடாய் நிற்பதற்கு முன்பாக மார்பகங்கள், கர்ப்பப்பை, கருமுட்டைக்குழாய் (பாபிலோபியன் குழாய்கள்) ஆகியவற்றை அகற்றுவதால் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் குறையும். இதைப் போல அறுவை சிகிச்சையில்லாத வழிகளும் உள்ளன. ஒருவேளை அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டால் மார்பகத்தை புனரமைக்கும் நிபுணர்கள் ஒரே நேரத்தில் இதைச் செய்து முடிக்க வேண்டியது அவசியம்.
அறுவை சிகிச்சையில்லாத இரண்டு வழிகள்
தமொக்சிபென் என்ற மருந்தை ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து உட்கொள்ளுவதால் புற்றுநோயை உருவாக்கும் ஹார்மோனை இது நேர்மறையாக மாற்றுகிறது.
தீவிர கண்காணிப்பு
- இந்தியா போன்ற நாடுகளில் மார்பகப் புற்றுநோயை குணப்படுத்தவல்ல மரபணு கிளினிக்குகள் மிகக் குறைவு. அறுவை சிகிச்சைகளைக் குறைக்கும் வழியில் தீவிரக் கண்காணிப்பு மிக முக்கியமான காரணியாகக் கருதப்படுகிறது.
- இந்த முறை மார்பகப் புற்றுநோயைத் தடுக்காது. ஆனால் அதனை விரைவில் கண்டறிய உதவும்.
- இரண்டு மார்பகங்களிலும் எம்ஆர்ஐ மற்றும் மாமோகிராம் ஆகிய இரண்டு சோதனைகளையும் செய்ய வேண்டும்.
- 25 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் இந்தச் சோதனையைச் செய்ய வேண்டும் அல்லது குடும்பத்தில் இளவயதில் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவர்களின் அப்போதைய வயதிற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் சோதனை மேற்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க:ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருமா? கட்டுக்கதைகளும் உண்மைகளும் : பாகம்-1