சென்னை: நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்பார்கள். நோயின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதுதான் அனைவரது ஆசையும். ஆனால் இன்றைய சூழலில் நிலம், நீர், காற்று என அனைத்தும் மாசு பட்டு உயிருக்கு ஆபத்தான நோய்களை உருவாக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்து பக்குவமாகச் செல்லும் நாம், நம் வீடுதான் ஆரோக்கியமாக வாழச் சிறந்த இடம் என்ற நம்பிக்கையில் நாட்களை ஓட்டுகிறோம். ஆனால் வீட்டிற்குள்ளும் நச்சு வாயு கலந்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் சுற்றுச்சூழலில் உள்ள மிகவும் மோசமான காற்றின் தரத்தால் 6.7 மில்லியன் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO - World Health Organisation) எச்சரிக்கிறது. ஆனால் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழும் போது, நோய்களின் தாக்கம் குறைந்து ஆரோக்கியமாக வாழ முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கட்டிடத்தின் உட்புறத்தில் உள்ள நச்சு வாயு எவை?
கட்டிடங்களுக்கு வர்ணம் பூசப் பயன்படுத்தப்படும் பெயிண்டுகள், வீட்டில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள், கிருமிநாசினிகள், வார்னிஷ்கள், ஏர் ஃப்ரெஷனர்கள், அழகு சாதனப் பொருட்கள், டியோடரண்டுகள், தரைகளைத் துடைக்கப் பயன்படுத்தப்படும் லிக்விடுகள் போன்றவற்றில் கலந்திருக்கும் ஆவியாகும் கரிம சேர்மங்கள் (VOC) போன்றவை நச்சு வாயுவை உமிழ்கின்றன.
இதனால் எவ்வாறு நோய்கள் உண்டாகும்?
பெயிண்டுகள், ஏர் ஃப்ரெஷனர்கள், கிருமிநாசினிகள் ஆவியாகும் கரிம சேர்மங்கள் போன்றவற்றை நாம் சுவாசிக்கும் போது, தொண்டையில் எரிச்சலூட்டுகின்றன. மேலும் மூக்கு மற்றும் கண்களில் தொற்றுநோயை ஏற்படுத்துகின்றன. மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்றவற்றையும் ஏற்படுத்துகின்றன. இது மட்டுமில்லாமல், நரம்பு மண்டலம் மற்றும் நுரையீரல் உள்ளிட்ட உடல் உள் உறுப்புகளையும் பாதிக்கின்றன.
எவ்வாறு தடுப்பது?
சுற்றுச்சூழல் மட்டும் இன்றி நமது வீடுகளுக்கு உள்ளேயும் நச்சு வாயு கலந்திருக்கும் நிலையில் அவற்றைப் போக்கி ஆரோக்கியமாக வாழ வீட்டிற்குள் பூச்செடிகள், ஆழகுச் செடிகள் உள்ளிட்ட தாவரங்களை வளர்ப்பதுதான் சிறந்த தீர்வு. இந்த செடிகள் நச்சு வாயுவை உறிஞ்சி சுத்தமான ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறது. அது மட்டும் இன்றி வீட்டைக் குளிர்ச்சியாகவும், மனதிற்கு அமைதியான சூழலையும் உருவாக்குகிறது.
வீட்டிற்குள் என்னென்ன செடிகளை வளர்க்கலாம்?
வீட்டிற்குள் மணி பிளாண்ட் (Money Plant), துளசி, லெமன் கிராஸ், க்ரோடன்ஸ், மூங்கில் செடி, லாவெண்டர், அமைதி லில்லி, பாம்பு ஆலை, கற்றாழை, உள்ளிட்ட பல்வேறு செடிகளை வளர்க்கலாம். இவை, காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு, ஃபார்மாடிகைடு, பென்சைன் போன்ற நச்சு வாயுவைச் சுவாசித்து, ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. குறிப்பாக, மணி பிளாண்ட் கொடி வளர்ப்பது மிகவும் நல்லது.
இதையும் படிங்க: அஸ்வினி பூச்சி தொல்லையா?.. அப்போ கண்டிப்பா இத பண்ணுங்க! இரண்டே நாள்ல சரி ஆகிடும்!