இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை ருத்ரதாண்டவம் ஆடிவருகிறது. தினந்தோறும் நான்காயிரம் பேர் வரை உயிரிழந்து வருகின்றனர். மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. கரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசி செலுத்தும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், தற்போது பல்வேறு மாநிலங்களில் ’கருப்பு பூஞ்சை நோய்’ பரவத் தொடங்கியுள்ளது. ’மியூகோர்மைகோஸிஸ்’ என்ற இந்த நோய், குறிப்பாக கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டுவந்த நபர்களைக் குறி வைக்கிறது.
இந்த நோயில் பாதிக்கப்படுவர்கள், பலரின் உடல் பாகங்களை அகற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு ஒருபுறம் கருப்பு பூஞ்சை வீரியமெடுத்து வரும் நிலையில், மற்றொரு புறம் 'வெள்ளைப் பூஞ்சை' தன் ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் சில பகுதிகளில் தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த நோயின் அறிகுறிகளைக் காணலாம்.
- வெள்ளை பூஞ்சை நோய் நுரையீரலைத் தாக்குவது மட்டுமின்றி நகங்கள், தோல், வாய், வயிறு, சிறுநீரகம், மூளை, பிறப்புறுப்பு உள்ளிட்ட பாகங்களையும் பாதிப்பதாகக் கூறப்படுகிறது.
- வெள்ளை பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா அறிகுறிகளே இருக்கும். ஆனால், கரோனா பரிசோதனையில் அதனைக் கண்டுபிடிக்க முடியாது.
- வெள்ளைப் பூஞ்சை பாதிப்பை ’சிடி ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே’ மூலமாகதான் கண்டறிய முடிகிறது என, மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
- கோவிட்-19 நோயாளிகளுக்கு வெள்ளைப் பூஞ்சை தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது நுரையீரலை பாதிப்பதோடு கரோனா அறிகுறிகளையே கொண்டுள்ளது.
- நீரிழிவு நோய், புற்றுநோய் நோயாளிகள் மற்றும் நீண்ட காலத்திற்கு ஸ்டெராய்டுகளை உட்கொள்பவர்கள் போன்ற நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை இது எளிதாகத் தாக்குகிறது.
- இந்த வெள்ளைப் பூஞ்சை நோய் கருப்பு பூஞ்சையைவிட பெரிம் ஆபத்தை ஏற்படுத்தவல்லது என எச்சரிக்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்!