திருமணத்தை ஆயிரம் காலத்து பயிர் என முன்னோர்கள் கூறுவது அந்நாளின் முக்கியத்துவத்தின் காரணமாகத்தான். திருமணம் செய்யும் ஆண், பெண் இருவருக்குமே அது ஒரு ஒப்பற்ற நாள். அப்படிப்பட்ட திருமணத்தை விமரிசையாக நடத்த மணமக்களின் பெற்றோர் ஓரிரு மாதங்களுக்கு முன்னதாகவே ஏற்பாடு செய்யத் தொடங்கிவிடுவர்.
மணமகளும் தன் பங்கிற்கு, காலையில் முகூர்த்தம் தொடங்கி இரவு சாந்தி முகூர்த்தம் வரை என்னென்ன ஆடைகளை உடுத்தலாம், என்ன மாதிரியாக சிகை அலங்காரம் செய்யலாம் உள்பட அனைத்தையும் பட்டியலிட்டுவிடுவார்.
அதென்ன மணமகள் மட்டும்தான் இப்படியெல்லாம் செய்வாங்களா? என்று கேட்டால், அது தான் இல்லை. இப்போதெல்லாம் மணமகன்களும் தங்களுக்கென தனித்துவமான ஆடைகளைத் தேர்வு செய்து, பார்லர்களுக்குச் சென்று தங்களை மேலும் அழகுபடுத்திக் கொள்கின்றனர். ஆனால் பார்லர் செல்லாமலே உங்கள் திருமண நாளென்று புத்துணர்வாக தோற்றமளிக்க சில டிப்ஸ்களை இங்கு காணலாம்.
அடிக்கடி முகம் கழுவுங்கள்!
இந்த தலைப்பே உங்களுக்கு வெகு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் குளிர்ந்த நீரில் அடிக்கடி முகம் கழுவும்போது நிச்சயமாக நீங்கள் புதிய மாற்றத்தை உணர்வீர்கள். முகத்தில் அழுக்கு படிவதை முற்றிலும் தவிர்க்க உதவும்.
உங்கள் முகச்சருமத்திற்கு ஏற்ற பேஸ்வாஷ் (Facewash) வாங்கி பயன்படுத்துங்கள். முடிந்தவரை வேதிப்பொருள்களைத் தவிர்த்துவிட்டு இயற்கை முறையிலான பொருள்களைத் தேர்ந்தெடுங்கள். உதாரணமாக குளிக்கும் போது முகத்திற்கு சோப் போடுவதைத் தவிர்த்துவிட்டு கடலை மாவு உபயோகியுங்கள். சோப் சருமத்தை கடினமாக்கிவிடும்.
தலையணை!
தலையணை உறையைத் துவைக்க மறக்காதீர்கள். இதன் மேற்பரப்பில் எண்ணெய், தூசி போன்றவை படிந்திருக்கலாம். இது முகத்தில் பரு உருவாக வழி வகுக்கும்.
நீர்ச்சத்தை மேம்படுத்துங்கள்!
தோலை பராமரிப்பதில் தண்ணீருக்கு முக்கிய பங்குண்டு. சரியான அளவில் தண்ணீர் அருந்தாவிட்டால் தோல் வறட்சி ஏற்படும். ஒவ்வொரு நாளும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்கத் தொடங்குங்கள்; நீர்ச்சத்து நிறைந்த பழங்களும், காய்கறிகளும் சருமத்திலிருந்து நச்சுகளை வெளியேற்றி பளபளப்பாக மாற்றும்.
சிகை அலங்காரம்!
மணமகனின் கலையான முகத்திற்கு அவரது சிகை, தாடி, மீசை ஆகியவையும் பிரதான காரணமாக இருக்கும். திருமணம் நெருங்கும் சில நாள்களுக்கு முன்னரே எந்த ’ஹேட் கட்’ உங்களை அழகாக காட்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இது தொடர்பாக சிகைத் திருத்தும் நபரிடம் கலந்தாலோசியுங்கள். தாடி மற்றும் மீசையில் உள்ள முடிகளை ட்ரிம் செய்து கச்சிதமாக அழகு செய்து விடுங்கள். சாத்தியப்படுமானால் திருமணத்திற்கு முன்னரே ஒத்திகை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். சரிவரவில்லையென்றால் மாற்றிக் கொள்ளலாம் இல்லையா?
முகத்தோற்றத்தில் மிக முக்கியமான பங்கு, புருவத்திற்கு உண்டு. சிகை அலங்காரத்தின் போது புருவத்தை அழகுப்படுத்துவதில் கவனமாக இருங்கள். அடர்ந்த புருவம் அனைவருக்கும் நல்ல தோற்றத்தை தருவதில்லை. உங்கள் துணைக்கு அருகில் அடர்ந்த புருவத்துடன் கரடி போல நிற்பதை நீங்கள் விரும்பமாட்டீர்கள் தானே!
புன்னகை செய்ய மறக்காதீங்க!
எல்லாவற்றையும் கனக்கச்சிதமாக செய்து விட்டு சிரிக்காமல் இருக்க முடியுமா? மெல்லிய புன்னகை செய்ய மறக்காதீங்க. அதே சமயம் முகச்சருமத்தைப் பேணுவதை போல பற்களையும் பராமரிக்க வேண்டும். மணமகனுக்கு எல்லாமே சரியாக இருந்து பற்கள் நன்றாக இல்லை என்றால் மொத்த அழகும் வேஸ்ட். பற்களை இருமுறை விலக்கி சுத்தமாக வைத்திருங்கள். உங்கள் பற்களை மஞ்சள் நிறமாக இருக்கும்பட்சத்தில் எலுமிச்சையுடன், உப்பு சேர்த்து விலக்குங்கள்.
இந்த டிப்ஸை மணமகன் மட்டுமில்லாமல் மணமகளும் அவர்களுக்கேற்றவாறு பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக, திருமண நாளன்று மென்மையான வாசனை திரவியங்களைப் பயன்படுத்துங்கள். வீண் தலைவலி எதற்கு?