கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இதய செயல்பாடுகளை ஆராய்ந்தபோது, பாதிப்பிற்குள்ளானவர்களில் 24 விழுக்காட்டினர் இதய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதயத்தில் பிரச்னை உள்ள நபர்கள் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அதீத பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதில் இதய செயலிழப்பு, அசாதாரண இதயத் துடிப்பு, மாரடைப்பு, இதய அதிர்ச்சி ஆகிய பிரச்னை உள்ளவர்களில் யாருக்கு அதிக அபாயம் உள்ளது என்பதைக் கண்டறிய ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுசெய்து வருகின்றனர். அவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை வழங்க முடியும் எனக் கூறப்பட்டது.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் பேசுகையில், ''கரோனா வைரசால் இதய பிரச்னை உள்ளவர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் எந்த வகையான இதய பாதிப்பு பிரச்னைகள் உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய வேண்டிய தேவை உள்ளது'' எனக் கூறினர்.
இந்நிலையில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக சுகாதார மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதய பாதிப்பு உள்ள 300 பேரின் ஈசிஜி, இதயத் துடிப்பு, சுவாசச் செறிவு, சிடி ஸ்கேன் பரிசோதனை முடிவுகள், எக்கோ கார்டியோகிராஃபி முடிவுகள் என அனைத்துப் பரிசோதனை தகவல்களையும் வைத்து ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வுகளின் மூலம் கரோனாவால் பாதிக்கப்பவர்களுக்கு இதய பிரச்னை ஏற்படுவதற்கு முன்பாகவே அடையாளம் காணப்பட்டு, உயிரிழப்பைத் தடுக்க உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மையத்திற்கு தேசிய அறிவியல் அறக்கட்டளை சார்பில் 195 ஆயிரம் டாலர் நிதி ஆராய்ச்சி மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா இதய பாதிப்புகளை அதிகரிக்குமா?